ஒரு முறை ஒர் பேரரசன் தன் ராஜாங்கத்தையும் பதவியையும் துறந்து துறவறம் மேற்க்கொள்ள எண்ணினான். அதற்காக அவன் புத்தரை நாடி வந்தான். புத்தரை பார்க்கப்போகும் முன் தன் உயர்ந்த ஆடைகளையும் ஆபரணங்களையும் துறந்து, ஒரு சாதாரண வெள்ளை நிற ஆடையை அணிந்தான், பிறகு தன் முடியையும் முழுமையாக மொட்டை அடித்துக்கொண்டான்.
புத்தரைச் சந்திக்கும் பொழுது, அவருக்கு கொடுக்க ஒரு கையில் ஒரு விளையுயர்ந்த வைரக்கல்லையும் , மற்றொரு கையில் ஒரு அழகிய தாமரையையும் கொண்டு மெதுவாக புத்தரை நோக்கி, வெறும் காலில் நடந்தான். வழி நெடுகிலும் துறவிகள் பலர் அமர்ந்து தியானம் செய்த வண்ணம் இருந்தனர்.
புத்தரும் தியான நிலையில் கண்களை மூடி இருந்தார். அந்த அரசர் தம் அருகில் வர, புத்தர் மெல்லிய குரலில் “அதை கீழே போடு” என்றார். பேரரசன் திகைத்து தம் வலது கையில் இருந்த வைரக் கல்லை கீழே எறிந்தான். மீண்டும், புத்தர் கண்களை முடியவாரே “அதை கீழே போடு” என்றார். பேரரசன் தம் இடது கையில் இருந்த தாமரையைக் கீழே எறிந்தான். இம்முறை புத்தர் உரத்த குரலில் “அதை கீழே போடு” என்றார். அரசனுக்கு ஒன்றும் புரியவில்லை, “நான், என் ஒரு கையில் இருந்த வைரக்கல்லையும் எறிந்தேன், மற்றோரு கையில் இருந்த மலரையும் எறிந்தேன்”, பிறகு தன்னிடத்தில் துறப்பதற்கு என்ன உள்ளது என்று குழம்பினான்.
சில நொடிகளில், தன் தவறை புரிந்து கொண்டான்….”தாம் துறக்கவேண்டியது நான், என் என்ற அகங்காரத்தையும் சேர்த்துத் தான்”. இம்முறை நான், என் என்ற கர்வத்தை துறந்து பணிவுடன் வணங்கினான், புத்தரும் தம் கண்களை திறந்து ஆசிர்வதித்தார்.
பணிவு ஒன்றே மோக்ஷத்திற்கு வழி வகுக்கும்.