டெல்லி: விவசாய சட்டங்களை திரும்பபெறக் கோரி காங்கிரஸ் எம்.பி.க்களுடன் நாடாளுமன்ற வளாகத்தில் உள்ள காந்தி சிலை முன்பு ராகுல்காந்தி தர்ணா போராட்டம் நடத்தினார்.
மத்திய பாஜக அரசு கொண்டு வந்துள்ள 3வேளாண் சட்டங்களை திரும்ப பெற வலியுறுத்தி விவசாயிகள் போராட்டம் 200 நாட்களை கடந்து நடைபெற்று வருகிறது. ஆனால், சட்டத்தை திரும்ப பெற முடியாது என மத்தியஅரசு திட்டவட்டமாக அறிவித்து உள்ளது. வேளாண் சட்டங்களை எதிர்த்து டெல்லி எல்லையில் நடைபெற்று வந்த விவசாயிகள் போராட்டம் இன்று முதல் டெல்லியினுள் உள்ள ஜந்தர்மந்தர் பகுதியில் நடைபெற மாநில அரசு அனுமதி வழங்கி உள்ளது. நாள் ஒன்றுக்கு 200 பேர் மட்டுமே போராட்டத்தில் கலந்துகொள்ள நிபந்தனைகளுடன் அனுமதி வழங்கப்பட்டு உள்ளது. இதையொட்டி அந்த பகுதியில் பலத்த பாதுகாப்பு போடப்பட்டு உள்ளது.
இந்த நிலையில், விவசாயிகளுக்கு ஆதரவாக வேளாண் சட்டங்களை திரும்ப பெற வலியுறுத்தி நாடாளுமன்ற வளாகத்தில் உள்ள காந்தி சிலை முன்பு காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி தலைமையில் காங்கிரஸ் எம்.பி.க்கள் தர்ணா போராட்டம் நடத்தினர்.
முன்னதாக பஞ்சாப் காங்கிரஸ் எம்.பி.க்கள் பாராளுமன்ற வளாகத்தில் காந்தி சிலைக்கு முன்னால் மூன்று பண்ணை சட்டங்கள் தொடர்பாக போராட்டம் நடத்தினர்.