டெல்லி: பெகாசஸ் உளவு மென்பொருள் மூலம், இந்திய தலைவர்களின் செல்போன்கள் ஒட்டு கேட்கப்பட்டதாக எழுந்த புகார் தொடர்பாக உச்சநீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்யப்பட்டு உள்ளது. வழக்கறிஞர் மனோகர் லால் சர்மா உச்சநீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்துள்ளார்.
இந்தியா மட்டுமின்றி உலக நாடுகளில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது இஸ்ரேலின் என்எஸ்ஓ அமைப்பின் பெகாசஸ் ஸ்பைவேரரின் உளவு விவகாரம். இந்தியாவில் காங்கிரஸ் தலைவர ராகுல்காந்தி, மத்திய அமைச்சர்கள், எதிர்க்கட்சி தலைவர்கள், பத்திரிகையாளர்கள் உள்பட பலரின் அலைபேசிகள் உளவு பார்க்கப்பட்டதாக ஊடகங்களில் செய்திகள் பரவி பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. இதுகுறித்து விவாதிக்க வேண்டும் என்றும், பிரதமர் மோடி மற்றும் உள்துறை அமைச்சர் அமித்ஷா ஆகியோருக்கு இந்த ஒட்டுக்கேட்பு விவகாரத்தல் தொடர்பு இருப்பதாக காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் குற்றசாட்டி வருகிறது. நாடாளுமன்ற இரு அவைகளையும் முடக்கி வருகின்றன. ஆனால், இதற்கும் அரசுக்கும் எந்தவொரு சம்பந்தமும் இல்லை மத்திய அரசு தரப்பில் மறுப்பு தெரிவித்திருந்த போதிலும், பெகாசஸ் விவகாரம் டெல்லி அரசியல் வட்டாரத்தில் பெரும் பூகம்பமாக வெடித்துள்ளது.
இந்த நிலையில், செல்போன்கள் ஒட்டு கேட்கப்பட்டதாக எழுந்த புகார் தொடர்பாக உச்சநீதிமன்றத்தில் பொதுநல வழக்கு மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது. வழக்கறிஞர் எம்எல் சர்மா இந்த மனுவை தாக்கல் செய்துள்ளார். மனுவில் பெகாசஸ் உளவு விவகாரம் குறித்து உச்சநீதிமன்ற கண்காணிப்பின் கீழ் சிறப்பு விசாரணை குழு அமைத்து விசாரிக்க வேண்டும் என வலியுறுத்தி உள்ளார்.
இந்த மனு விரைவில் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்படும் என தெரிகிறது.