லக்னோ
நேற்று லக்னோவில் 45 தனியார் மருத்துவமனைகளில் நடந்த திடீர் சோதனையில் குளிர்சாதனப் பெட்டிகளில் பீர் பாட்டில்கள் இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது.
பாஜக ஆளும் உத்தரப்பிரதேச மாநில தலைநகர் லக்னோவில் கொரோனா 2ஆம் அலை தாக்குதல் கடுமையாக இருந்தது. இதையொட்டி பல்லாயிரக்கணக்கானோர் தனியார் மருத்துவமனைகளிலும் சிகிச்சை பெற்றனர். பெரும்பாலான தனியார் மருத்துவமனைகளில் பல மடங்கு கட்டணம் வசூலித்ததால் அரசுக்கு பலர் புகார்கள் அனுப்பினர்.
இந்த புகார்களின் அடிப்படையில் லக்னோ நகரில் உள்ள 45 மருத்துவமனைகளில் திடீர் சோதனை நடைபெற்றது. அம்மாவட்ட ஆட்சியர் அபிஷேக் பாண்டே உத்தரவின் பேரில் துணை ஆட்சியர்கள் குழுக்களாகப் பிரிந்து ஒரே நேரத்தில் சோதனைகள் நடத்தி உள்ளனர். இந்த சோதனையில் போது பல அதிர்ச்சி தகவல்கள் தெரிய வந்துள்ளது.
அவை பின் வருமாறு
பெரும்பாலான மருத்துவமனைகள் அரசு உரிமம் இல்லாமலும் அல்லது அரசு உரிமம் புதுப்பிக்கப்படாமலும் இயங்கி வந்துள்ளன. பல மருத்துவமனைகளில் நிரந்தர மருத்துவர்கள் இல்லாமல் தற்காலிக மருத்துவர்களே பணியாற்றி வந்துள்ளனர். ‘
இதில் நியூ ஏசியன் ஹாஸ்பிட்டல் அண்ட் ட்ராமா சென்டர்’ என்ற மருத்துவமனையில் பி.எஸ்சி. மட்டுமே பயின்ற அதன் உரிமையாளர் பிரேம்குமார் வர்மா, நோயாளிகளுக்கு மருத்துவம் பார்த்து வந்துள்ளார். பல மருத்துவமனைகளில் செவிலியர் பணியில் அதன் பயிற்சிப்பள்ளி மாணவர்கள் பயிற்சி பெறும் பொருட்டு பணி செய்து வந்துள்ளனர்.
குறிப்பாக சோதனை நடந்த மருத்துவமனைகள் சிலவற்றில் குளிர்சாதனப் பெட்டிகளில் மருந்துகளுக்கு பதிலாகபீர் பாட்டில்கள் வைக்கப்பட்டிருந்தன. மேலும் மூன்று மருத்துவமனைகளில் அவசர சிகிச்சை மற்றும் அதிநவீன சிகிச்சைப் பிரிவில் எக்ஸ்ரே உள்ளிட்ட அடிப்படை வசதிகள் இல்லை.
பல மருத்துவமனைகளில் இருந்த மருந்துக் கடைகளில் உரிமம் இல்லை. தவிர உரிமம் பெற்ற மருந்துக் கடைகளிலும் மருந்தக படிப்பு படித்தவர்கள் எவரும் இல்லை. மருத்துவமனைகளில் அரசால் அனுமதிக்கப்பட்டதை விட அதிக படுக்கைகள் இருந்ததும் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. அனைத்து மருத்துவமனைகளிலும் சிகிச்சைக்குப் பின் வீடு திரும்பும் நோயாளிகளின் மருத்துவ அறிக்கைகள் எதுவும் பல மருத்துவமனைகளில் பதிவாகவில்லை.
இதையொட்டி பல மருத்துவமனைகளை உடனடியாக மூடுமாறு லக்னோ மாவட்ட தலைமை மருத்துவ அதிகாரி உத்தரவிட்டுள்ளார்., ஒரு சில மருத்துவமனைகளுக்கு விளக்கம் கேட்டு அறிக்கை அனுப்பப்பட்டுள்ளது.