சேலம்: ஆடி முதல்நாளையொட்டி இன்று காலை சேலத்தில் தேங்காய் சுடும் திருவிழா கொண்டாடப்பட்டது. பல பகுதிகளில் பெண்கள், ஆண்கள், சிறுவர், சிறுமியர் என பலதரப்பினரும் தேங்கையை தீயில் சுட்டு மகிழ்ச்சியை வெளிப்படுத்தினார்.

திருவிழாக்கள் நிறைந்த ஆடி மாதத்தைக் கோலாகலமாகத் தொடங்கிவைப்பதில் சேலம் மற்றும் சுற்றுவட்டார மாவட்டங்களில்  தேங்காய்ப் பண்டிகைக்கு முக்கியப் பங்கு உண்டு. ஆடி மாதத்தின் முதல் நாளில் சேலம், நாமக்கல், ஈரோடு, தருமபுரி மாவட்டங்களில் சில கிராமப்பகுதிகளில் தேங்காய் சுடும் திருவிழா வெகு விமரிசையாகக் கொண்டாடப்படுவது வழக்கம். குறிப்பாக கொங்கு மண்டலத்தில்  காவிரி நீர்ப் பிடிப்பு பகுதிகளில் ஆடி மாதம் முதல் நாளையொட்டி ஆண்டுதோறும் தேங்காய் சுடும் பண்டிகை கொண்டாடப்பட்டு வருகிறது வழக்கம். அதன்படி இன்று பல பகுதிகளில் தேங்காய் சுடும் திருவிழா கொண்டாடப்பட்டது.

இந்தப் பண்டிகை கொண்டாடப்படும் நிகழ்ச்சி மகாபாரதக் கதையுடன் தொடர்புடையதாகக் கூறப்படுகிறது.  அதர்மத்துக்கும், தர்மத்துக்கும் இடையிலான மகாபாரத யுத்தம் ஆடி மாதம் 1 ஆம் தேதி தொடங்கி 18 நாட்கள் நடைபெற்று, ஆடி 18 அன்று முடிவுக்கு வந்தது. இந்தப் போரில் தர்மம் வெல்ல வேண்டும் என்று யுத்தம் தொடங்கும் நாளான ஆடி 1 ஆம் தேதி மக்கள் அனைவரும் தேங்காய் சுட்டு விநாயகர் மற்றும் அவரவர் இஷ்ட தெய்வங்களுக்கு படைத்து பூஜை செய்கிறார்கள்.

அதன்படி தேங்காய் சுடும் திருவிழா சேலம் மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் இன்று  விமரிசையாகக் கொண்டாடப்பட்டு வருகின்றது. சேலம் அரிசிபாளையம், கிச்சிபாளையம், சாமிநாதபுரம், அஸ்தம்பட்டி, அம்மாபேட்டை என மாநகரின் பல்வேறு பகுதியில் பொதுமக்கள் குடும்பம் குடும்பமாக தங்கள் வீட்டு முன் தேங்காய் சுட்டு சாமியை வழிப்பட்டு கொண்டாடினர். தேங்காய் சுடும் திருவிழாவை முன்னிட்டு சேலத்தில் தேங்காய் மற்றும் பூஜை பொருட்களின் விற்பனை அமோகமாக நடைபெற்றது.