maranarayil

தண்டவாளத்தில் கிடந்த
இவ்விரு உடல்களும்
இரயில் மோதித்தான்
இறந்தன.

இருவர் மீதும் மோதியது
ஒரே இரயில்தான்.

உயிர்ப்பலிக்காக மட்டுமே
புறப்படுகிறது இந்த இரயில்
ஒவ்வொரு முறையும்.

பச்சைக்கொடி காட்டுபவன்
ஓட்டுநர் இருக்கையில் இருப்பவன்
பரிசோதகன்
எல்லோரும்
வேறு வேறு பெயர்களில்
வேறு வேறு உடல்களில்
இருக்கும் ஒருவரே.

மரணத்தை வேடிக்கைப் பார்த்து
மகிழ விரும்பும் கூட்டத்திற்கு
இந்த இரயிலில் பயணிக்க
இடமுண்டு.

பயணச்சீட்டாக சாதிச்சான்றிதழைக்
காண்பித்தல் போதுமானது.

புறப்படும் இடமும்
சேரும் இடமும்
ஒன்றாகவே இருக்கின்ற
இந்த இரயிலில் பயணிப்போர்
உணர்வதேயில்லை
தாங்கள் தேங்கிக் கிடக்கிறோம் என்று.

எந்த நூற்றாண்டிலோ
ஓடத் தொடங்கிய இந்த இரயில்
பழுதாகாமலே பயணிக்கிறது
இன்னமும்.

அது கக்கும்
அடர்த்தியான புகைமண்டலத்தில்
மூச்சுத்திணறி சாவோரின் முகங்கள்
அப் புகைக்குள்ளேயே
புதைந்து போய் விடுகின்றன.

இரை தேடிப் பயணிக்கும்
ஒரு பாம்பைப் போல்
வளைந்து நெளிந்து வரும்
இந்த இரயிலின்
பெரும் சீற்றச் சத்தத்தில்
அமிழ்ந்து போய் விடுகின்றன
பல மரண ஓலங்கள்.

இந்த இரயிலைத் தகர்க்கும்
வெடிகுண்டுகளை
நாம் தயாரித்தாக வேண்டும்.

அது சுக்கு நூறாய்ச் சிதறும் போது
எழுகின்ற பேரொலியை
மீறிக் கேட்கும்
மனிதத்தின் சிரிப்பொலி!

 

-பழ.புகழேந்தி