மும்பை: மும்பை சர்வதேச விமான நிலையத்தை அதானி குழுமம் கைப்பற்றி உள்ளது. ஏற்கனவே நிர்வகித்து வந்த  ஜிவிகே குழுமத்திடம் இருந்து அதானி குழுமம் நிர்வாக பொறுப்பை கைப்பற்றி உள்ளது.

மத்திய பா.ஜ.க அரசு பொதுத்துறை நிறுவனங்களை தனியார்மயமாக்கி வருகிறது. அதன் ஒரு பகுதியாக விமான நிலையங்களைத் தனியார்மயமாக்கும் நடவடிக்கையில்  தீவிரமாக இறங்கியுள்ளது. அரசு – தனியார் கூட்டு முயற்சி என்ற அடிப்படையில், இந்த விமான நிலையங்களைத் தனியாரிடம் மத்திய அரசு குத்ததைக்கு விடுகிறது. முதற்கட்டமாக லக்னோ, அகமதாபாத், ஜெய்ப்பூர், மங்களூரு, திருவனந்தபுரம், கவுகாத்தி ஆகிய விமான நிலையங்களை  நிர்வகிக்கும் உரிமையை ஏலம் வழியாக அதானி நிறுவனம் பெற்றது. இந்த நிலையில், தற்போது மும்பை சர்வதேச விமான நிலையமும் அதானி கைக்கு சென்றுள்ளது. இதற்கு மத்திய அரசு, மகாராஷ்டிரா மாநில அரசு மற்றும் நகர் மற்றும் தொழில்துறை மேம்பாட்டுக் கழகம் ஆகியவை ஒப்புதல் கொடுத்துள்ளது.

இதைத்தொடர்ந்து இதுவரை மும்பை விமான நிலையத்தை பராமரித்து வந்த, ஜிவிகே குழுமத்திடம் இருந்து அதானி குழும் கைப்பறியுள்ளது. இதை  மும்பை விமான நிலைய நிர்வாகக் குழு அதிகாரப்பூர்வமாக வெளியிட்டுள்ளது.

இதன் காரணமாக,  அதானி ஏர்போர்ட் ஹோல்டிங்ஸ் தற்போது இந்திய விமான நிலையங்களின் நிர்வகிப்பில் 25 சதவீத பங்களிப்பைத் தன் வசம் கொண்டுள்ளது. நாட்டின் மிகப்பெரிய விமான நிலைய நிர்வகிப்பு நிறுவனமாக அதானி குழுமம் விளங்குகிறது/

நாடு முழுவதும் இதுவரை மொத்தம் 8 விமான நிலையங்களின் நிர்வாக உரிமையை கொண்டுள்ள அதானி நிறுவனம், விமான சரக்குப் போக்குவரத்திலும் 33 சதவீத பங்களிப்பை கொண்டுள்ளது.  இதன் மூலம், நாட்டின் மிகப்பெரிய விமான நிலைய உட்கட்டமைப்பு நிறுவனமாக அதானி குழுமம் உருவெடுத்துள்ளது.

இதுகுறித்து செய்தியளார்களிடம் பேசிய, அதானி குழுமத்தின் தலைவர் கவுதம் அதானி ,  “உலகத்தரம் மிக்க மும்பை விமான நிலையத்தின் நிர்வாக உரிமையைப் பெற்றிருப்பது மகிழ்ச்சி அளிக்கிறது. வர்த்தக ரீதியாகவும், பயணிகள் வருகையிலும் இரண்டாவது பெரிய விமான நிலையம் இது. அதானி நிறுவனத்தின் விரிவாக்க உத்திகள் மூலம் உலகத்தரத்தில் விமான நிலையங்களை மேம்படுத்தி டயர் 1 நகரங்களை டயர் 2 மற்றும் டயர் 3 நகரங்களுடன் இணைப்பதற்கான முயற்சிகள் மேற்கொள்ளப்படும். இதன்மூலம் நகரம், கிராமம் என்கிற வேறுபாடு குறைக்கப்படும் என எதிர்பார்க்கிறேன்.  நவி மும்பை சர்வதேச விமான நிலைய கட்டுமான செயல்பாடுகள் அடுத்த மாதத்திற்குள் தொடங்கப்படும். 2024ல் மக்கள் பயன்பாட்டுக்குக் கொண்டுவரப்படும்.

இவ்வாறு அவர் கூறினார்.