டில்லி

குஷ்பு திமுகவில் சேரப்போவதாக வந்த செய்தி குறித்து அவர் விளக்கம் அளித்துள்ளார்.

தமிழக பாஜகவில் தலைவராக இருந்த எல் முருகன் மத்திய அமைச்சரவையில் இணை அமைச்சராகப் பதவி ஏற்றார்.   இதையொட்டி தமிழக பாஜக தலைவராக முன்னாள் ஐ பி எஸ் அதிகாரி அண்ணாமலை பொறுப்பு ஏற்றார்.  காங்கிரஸில் இருந்து பாஜக மாறிய நடிகை குஷ்பு இதனால் அதிருப்தி அடைந்துள்ளதாகவும் அவர் திமுகவில் சேர உள்ளதாகவும் தகவல்கள் வெளியாகின.

இது குறித்து குஷ்பு ஒரு செய்தி ஊடகத்துக்கு அளித்த பேட்டியில், “மனசாட்சியை அடகு வைத்து விட்டு, நான் திமுகவில் சேரப்போகிறேன் என்னும் கீழ்த்தரமான செய்தியைச் சிலர் பரப்புகின்றனர். நான் எந்த ஒரு எதிர்பார்ப்புமின்றி பாஜகவில் இணைந்தேன். பாஜகவில் சேர்ந்த உடன், தேர்தலில் போட்டியிடும் வாய்ப்பு எனக்குக் கிடைத்தது.

தமிழக பாஜக தலைவராக அண்ணாமலை நியமிக்கப்பட்டதில் எனக்கு மிகவும் மகிழ்ச்சி. தமிழகத்தில் அண்ணாமலையை விட வேறு யாரும்  பாஜகவுக்குப் பலமாக இருக்க முடியாது. கட்சியிலும், ஆட்சியிலும் நான் பதவி எதையும் கேட்கவில்லை.  அதெல்லாம் வரவேண்டிய நேரத்தில் தானாக வரும்.” என்று கூறியுள்ளார்.

டில்லியில் இன்று பாஜக அமைப்பு பொதுச்செயலாளர் பி.எல்.சந்தோஷ், மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாரமான், இணையமைச்சர் எல்.முருகன் உள்ளிட்டோரை குஷ்பு சந்தித்தார் என்பது குறிப்பிடத்தக்கதாகும்,