சென்னை: சிறுமி மித்ராவுக்கான மருந்தின் மீதான 6 கோடி ரூபாய் மதிப்புள்ள ஜி.எஸ்.டி. உள்பட வரிகளை நீக்கி மத்திய நிதிஅமைச்சர் நிர்மலா சீத்தாராமன் அறிவித்துள்ளார். அவரது அறிவிப்பை சுட்டிக்காட்டி, மித்ராவுக்கு இன்னொரு தாயாராக மாறினீர்கள் என பாஜக எம்எல்ஏ வானதி சீனிவாசன் டிவிட் பதிவிட்டுள்ளார்.
ஈரோட்டைச் சேர்ந்த, 23 மாத பெண் குழந்தை மித்ரா, Autosomal Recessive Spinal Muscular Atropy (SMA)) என்ற, அரிய வகை மரபணு கோளாறு நோயால் பாதிக்கப்பட்டிருந்தார். இதனால் அக்குழந்தையால் நடக்க முடியாது. உரிய மருத்துவம் அளிக்க முடியாத நிலையில், உயிருக்கும் ஆபத்து வரும் சூழலுக்கு அக்குழந்தை தள்ளப்பட்டது .
குழந்தை மித்ரா சிகிச்சைக்கு தேவையான ரூ.16 கோடி தன்னார்வலர்களிடம் இருந்து கிடைத்துள்ளது. ஆனாலும் அந்த மருந்தை இறக்குமதி செய்ய 6 கோடி ரூபாய் தேவைப்பட்டது.
இதையடுத்து zolgensma என்கிற ஊசி மருந்து இறக்குமதி செய்யும்போது, அதில் இறக்குமதி வரியை ரத்து செய்யுமாறு பிரதமருக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின், வைகோ உள்ளிட்ட பலர் வேண்டுகோள் விடுத்தனர்.
முதல்வர் ஸ்டாலின் மத்தியஅரசுக்கு எழுதிய கடிதத்தில், அரிய வகை நோயான முதுகெலும்பு தசை செயலிழப்பு நோய் தாக்கினால், நரம்பு செல்கள் இழப்பும், மூளையில் இருந்து தசைகளுக்கு செல்லும் மின்சார சமிஞ்ஞைகள் இழப்பும் ஏற்படும். இந்த மரபணு சிகிச்சை அளிக்க ஒரு நபருக்கு ₹16 கோடி செலவாகும் என்று தெரியவருகிறது. தமிழ்நாட்டில் ஆண்டுக்கு 90 முதல் 100 பேர் இந்த நோயால் பாதிக்கப்படுவதாக தகவல்கள் வருகின்றன. இதற்கு சிகிச்சை அளிக்கும் போது, ‘‘ஜொல்ஜென்ஸ்மா’’ என்னும் மருந்தை ஒரு முறை ஊசி மூலம் செலுத்துவது அல்லது பல தடவை ‘‘ஸ்பைன்ரஸா’’ என்னும் மருந்தை செலுத்துவது அல்லது ‘‘ரிஸ்டிபாம்’’ என்னும் வாய் வழியாக உட்செலுத்துவது போன்ற சிகிச்சை முறைகளுக்கு அதிக செலவாகிறது. அதனால் இந்த நோய் பாதிக்கப்பட்ட குழந்தைகளின் பெற்றோர் இந்த சிகிச்சைக்காக செலவிட முடியாத நிலையில் இருக்கின்றனர். இந்த சிகிச்சைக்கு வேண்டிய மருந்துகளை வெளிநாடுகளில் இருந்து இறக்குமதி செய்யும்போது, அதன் மீது விதிக்கப்படும் சுங்க வரி, ஐஜிஎஸ்டி வரி மற்றும் இதர வரி ஆகியவைசிகிச்சைக்கான செலவை மேலும் அதிகப்படுத்துகின்றன. ஆகவே வரிகளை ரத்து செய்ய வேண்டும் என கோரிக்கை விடுத்திருந்தார்.
இந்த நிலையில் மித்ராவின் சிகிச்சை மருந்துக்காக ரூ. 16 கோடி திரட்டப்பட்ட நிலையில் அந்த மருந்துக்கான இறக்குமதி ஜிஎஸ்டி வரியை ஒன்றிய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் நீக்கி அறிவித்துள்ளார். எந்த விதமான கூடுதல் வரியும் இல்லாமல் மருந்தை இந்தியா கொண்டு வரும் வகையில் நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் அறிவித்துள்ளது பெரும் வரவேற்பை பெற்றுள்ளது.
இதுகுறித்து டிவிட் பதிவிட்டுள்ள பாஜக தேசிய மகளிர் அணி தலைவரும், தமிழ்நாடு பாஜக எம்எல்ஏவுமான வானதி ஸ்ரீனிவாசன், “சிறுமி மித்ராவின் மருந்துக்கு இறக்குமதி வரியை ரத்து செய்து குழந்தைக்கு இன்னொரு தாயாக மாறினீர்கள்” என ட்வீட் செய்துள்ளார். மேலும் ‘ஈரோட்டை சேர்ந்த சிறுமி மித்ராவின் விலக்கு அளித்தற்கு மிக்க நன்றி’ என்றும் அவர் கூறியுள்ளார்.