சென்னை: நீட் தேர்வு குறித்து தமிழ்நாடு அரசு அமைத்த குழு உச்சநீதிமன்ற தீர்ப்புக்கு எதிரானது அல்ல என்று கூறிய நீதிமன்றம், நீட் தாக்கம் குறித்து கருத்துக்களை கேட்பதற்காக குழு அமைத்து அதில் என்ன தவறு. அதுகுறித்து கேள்வி எழுப்ப நீங்கள் யார்? என்று பாஜக உறுப்பினர் கரு. நாகராஜனுக்கு உயர்நீதிமன்றம் கேள்வி எழுப்பியுள்ளது.
திமுக அரசு பதவி ஏற்றதும் நீட் தேர்வை ரத்து செய்வோம் என்று கூறியதுடன், அதன் தாக்கம் குறித்து ஆய்வு செய்து அறிக்கை அளிக்க ஓய்வு பெற்ற நீதிபதி ஏ.கே.ராஜன் தலைமையில் 8 பேர் கொண்ட உயர்மட்ட குழு ஒன்றை நியமித்திருந்தது.
இது தொடர்பான அரசாணையை ரத்துசெய்ய வலியுறுத்தி, பாஜகவின் கரு.நாகராஜன் சென்னை உயர்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்திருந்தார். இந்த மனு மீதான கடந்த விசாரணையின்போது, மனுதாரர் தரப்பில் நீட் தேர்வு நடைமுறையைப் புறந்தள்ளும் வகையில், தமிழக அரசு குழு அமைத்திருப்பதாகக் குற்றம் சாட்டினார்.‘ தமிழக அரசு தலைமை வழக்கறிஞர் ஆர்.சண்முகசுந்தரம் ஆஜராகி, தேர்தல் அறிக்கையில் உத்தரவாதம் அளிக்கப்பட்டதன் அடிப்படையில், கொள்கை முடிவு எடுக்கப்பட்டு குழு அமைக்கப்பட்டதாகத் தெரிவித்தார்.
அப்போது நீதிபதிகள் குறுக்கிட்டு, உச்ச நீதிமன்றத் தீர்ப்புக்கு முரணான நிலைப்பாட்டை எடுக்க முடியாது என அரசுக்கு அறிவுறுத்தினர். மேலும், குழு அமைப்பது தொடர்பாக உச்ச நீதிமன்றத்தின் அனுமதி பெறப்பட்டதா? எனவும் கேள்வி எழுப்பினர். அரசிடம் விளக்கம் பெற்றுத் தெரிவிக்க அவகாசம் வேண்டுமென அரசு தலைமை வழக்கறிஞர் கோரிக்கை வைத்தார். இதையடுத்த வழக்கு ஒத்தி வைக்கப்பட்டது.
வழக்கின் இன்றைய விசாரணையைத் தொடர்ந்து, நீட் பாதிப்புகள் குறித்து குழு அமைத்த தமிழ்நாடு அரசின் அறிவிப்பானணை உச்ச நீதிமன்ற உத்தரவுக்கு எதிரானது அல்ல என்று கருத்து தெரிவித்துள்ளது. மேலும், தமிழ்நாடு அரசு அமைத்துள்ள குழுவான, பாதிப்புகள் குறித்து ஆய்வு செய்ய மட்டுமே என்று கூறிய நீதிபதிகள், நீட் பாதிப்புகள் குறித்து ஆய்வு செய்தால் மட்டுமே அதனை உச்சநீதிமன்றத்தில் தமிழக அரசு தெரிவிக்க முடியும் என்று கூறியதுடன், ‘ இதுசம்பந்தமாக உச்ச நீதிமன்றம்தான் முடிவெடுக்கும் என்றும் தெரிவித்துள்ளது.
அப்போது மனுதாரர் தரப்பில், மருத்துவ கல்வியின் தரத்தை உயர்த்த தேசிய மருத்துவ ஆணைய சட்டத்தின்படி, நீட் தேர்வு நடத்தப்பட வேண்டும் என்று வலியுறுத்தப்பட்டது. அப்போது குறுக்கிட்டு பேசிய தலைமை நீதிபதி அமர்வு,
“நீட் பாதிப்பு சம்பந்தமாக தமிழக அரசு மக்களிடம் கருத்து கேட்பது குறித்து கேள்வி எழுப்ப நீங்கள் யார்?” அதில் என்ன தவறு உள்ளது என கேள்வியெழுப்பியுள்ளது. மேலும், “நீட் தேர்வு தொடர்பான மக்களின் கருத்துகளையோ, அல்லது பாதிப்பு தொடர்பாகவோ மத்திய அரசிடம் சமர்ப்பிக்க மாநில அரசு கமிட்டி அமைத்திருக்கலாம். நீங்களாகவே ஏன் முன்முடிவு எடுத்து எடுத்து கொள்கிறீர்கள்.
நீட் தேர்வு தாக்கம் குறித்து ஆராய ஏ.கே.ராஜன் தலைமையில் குழு அமைத்தது செல்லும். ஏ.கே. ராஜன் குழு அமைக்கப்பட்டதில் எந்த சட்ட விதிமீறலும் இல்லை. குழு அமைக்க அரசுக்கு அதிகாரம் உள்ளது. இதை வீண் செலவாக கருத முடியாது. என்று கூறி கரு. நாகராஜன் மனுவை உயர்நீதிமன்றம் தள்ளுபடி செய்தது.
இந்த வழக்கு தொடுத்ததன் மூலம் கரு.நாகராஜனுக்கு நல்ல விளம்பரம் கிடைத்துள்ளது.” என்றும் நீதிபதி அமர்வு குறிப்பிட்டுள்ளது.