சென்னை:
நீட் தேர்வு ரத்து என்பதுதான் தமிழ்நாட்டின் அனைத்து கட்சிகளின் நிலைப்பாடு என்று நாடாளுமன்ற முன்னாள் உறுப்பினர் டாக்டர் வா. மைத்ரேயன் தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து அவர் மேலும் தெரிவிக்கையில், நீட் தேர்வு ரத்து என்பதுதான் தமிழ்நாட்டின் அனைத்து கட்சிகளின் நிலைப்பாடு. நீட் தேர்விலிருந்து விலக்கு பெறுவது குறித்த சட்டமுன்வடிவு தமிழ்நாடு சட்டமன்றப் பேரவையில் கொண்டு வரப்பட்டால் அதனை பாஜக ஆதரிக்கும் என்று அதன் சட்டமன்ற கட்சித் தலைவர் தமிழ்நாடு சட்டமன்றப் பேரவையில் அறிவித்திருக்கிறார்.

அண்மையில் ஆட்சிப் பொறுப்பேற்றுள்ள திமுக நீட் தேர்விலிருந்து விலக்கு பெற சட்டமன்றத்தில் சட்டமுன்வடிவினை கொண்டு வருவதற்கு முன், அது குறித்து கருத்தினை அனைத்துத் தரப்பினரிடமும் கேட்க ஓய்வுபெற்ற உயர்நீதிமன்ற நீதியரசர் திரு. ஏ.கே. இராஜன் அவர்கள் தலைமையில் ஒரு குழு அமைத்து, அக்குழு தனது அறிக்கையை அரசிடம் அளிக்க உள்ளது.

இந்த சூழ்நிலையில், பாஜக மாநில பொதுச் செயலாளர் கரு.நாகராஜன் அவர்கள் நீட் தேர்விலும் விலக்கு பெறும் வண்ணம் தமிழ்நாடு அரசு ஒரு குழுவை நியமித்திருப்பது சட்டத்திற்கும், உச்சநீதிமன்றத் தீர்ப்பிற்கும் எதிரானது என்றும், அந்தக் குழுவை ரத்து செய்ய வேண்டும் என சென்னை உயர்நீதிமன்றத்தில் ஒரு ரிட் மனு தாக்கல் செய்தார்.

இதை விசாரித்த சென்னை உயர்நீதிமன்றம் இது குறித்து மத்திய, மாநில அரசுகளின் கருத்தினைக் கேட்டு அறிவிப்பினை அனுப்பியது. நீட் தொடர்பாக குழு அமைக்க அதிகாரம் தமிழ்நாடு அரசுக்கு இல்லை எனத் தெரிவித்து மத்திய அரசு சார்பில் சென்னை உயர்நீதிமன்றத்தில் மனுத் தாக்கல் செய்யப்பட்டுள்ளது. இதன்மூலம், பாஜகவின் இரட்டை நிலை வெட்ட வெளிச்சத்திற்கு வந்துள்ளது.

இந்த தருணத்தில், ஒன்பது ஆண்டுகளுக்கு முன்பு மாண்புமிகு அம்மா அவர்கள் தேசிய வளர்ச்சிக் குழுக் கூட்டத்தில் பேசியபோது, ” மாநிலங்கள் மேம்படுத்தப்பட்ட நகராட்சிகளாக ஆகி விட்டன – States have been reduced to glorified municipal corporations – என்று சொன்ன வார்த்தைகள் தான் என் நினைவிற்கு வருகின்றன. நீட் தேர்வு குறித்து ஒரு குழு அமைப்பதற்குக்கூட மாநில அரசுக்கு அதிகாரம் இல்லை என்று சொல்வது கண்டிக்கத்தக்கது. இது மாநில உரிமைகளைப் பறிக்கும் செயல் என்று சொன்னால் அது மிகையாகாது.

என்னைப் பொறுத்தவரையில், நீட் தேர்வு விலக்கு குறித்து குழு அமைப்பதற்கும் , அக்குழுவின் பரிந்துரையின் அடிப்படையில் தமிழ்நாடு சட்டமன்றப் பேரவையில் சட்டம் இயற்றவும் மாநில அரசுக்கு அதிகாரம் உண்டு. மாநில அரசின் அதிகாரத்தை குறைக்கும் நோக்கில் மனுத் தாக்கல் செய்துள்ள மத்திய அரசுக்கு எதிராக அனைத்துக் கட்சிகளும் குரல் எழுப்ப வேண்டும் என்று கேட்டுக்கொள்கிறேன் என்று குறிப்பிட்டுள்ளார்.