சென்னை
அமெரிக்காவில் மருத்துவ பரிசோதனை முடித்த நடிகர் ரஜினிகாந்த் சென்னை திரும்பி உள்ளார்/
நடிகர் ரஜினிகாந்த்துக்கு கடந்த 2016 ஆம் ஆண்டு மே மாதம் தீவிர சிறுநீரக பாதிப்பு ஏற்பட்டது. இதையொட்டி, அமெரிக்காவின் ராசெஸ்டர் நகரில் உள்ள மயோ மருத்துவமனையில் சிறப்பு மருத்துவர்கள் குழுவினரால் ரஜினிக்கு சிறுநீரக மாற்று அறுவை சிகிச்சை மேற்கொள்ளப்பட்டது. அவ்வப்போது அவர் அமெரிக்காவில் அதே மருத்துவமனையில் மருத்துவப் பரிசோதனை மேற்கொண்டு வருகிறார்.
தற்போது கொரோனா தொற்று குறைந்ததைத் தொடர்ந்து கடந்த 19 ஆம் தேதி சென்னையில் இருந்து விமானம் மூலம் மத்திய அரசின் அனுமதியோடு ரஜினிகாந்த் அமெரிக்கா சென்றிருந்தார். ரஜினிகாந்த் அமெரிக்காவில் மருத்துவ பரிசோதனை முடிந்த பின் சில நாட்கள் ஓய்வெடுத்து விட்டு இன்று அதிகாலை 3 மணி அளவில் விமானம் மூலம் சென்னை திரும்பினார்.
அவரது ரசிகர்கள் சென்னை விமான நிலையத்துக்கு வந்த ரஜினிகாந்தை தலைவா வாழ்க எனக் கோஷமிட்டு வரவேற்றனர். தமது மருத்துவ பரிசோதனை நல்லபடியாக முடிந்தது எனத் தகவல் தெரிவித்த ரஜினி பின் அங்கிருந்து இல்லம் புறப்பட்டுச் சென்றார். சிவா இயக்கத்தில் அவர் நடித்துவரும் அண்ணாத்த திரைப்படம் தீபாவளிக்கு வெளியாகவுள்ளதால், இறுதிக்கட்டப் பணிகளில் விரைவில் ஈடுபட உள்ளதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.