சென்னை: தரமற்ற சாலைகள் போடப்பட்டதால், நெடுஞ்சாலைத்துறையில் 3 பொறியாளர்களை பணியிடை நீக்கம் செய்தும், பணியை மேற்கொண்ட நிறுவனத்தின் ஒப்பந்தமும் ரத்து செய்தும் முதல்வர் ஸ்டாலின் அதிடியாக உத்தரவிட்டு உள்ளார்.
சிவகங்கை மாவட்டம் ஆண்டச்சியூரணி – ஓட்டாணம் இடையே தரமற்ற சாலைகள் அமைக்கப்படுவதாக அப்பகுதி மக்கள் குற்றம் சாட்டினர். இது தொடர்பாக நெடுஞ்சாலைத்துறை அமைச்சருக்கு புகார் கடிதம் அனுப்பப்பட்டிருந்தது. இதுதொடர்பாக சாலையை ஆய்வு செய்ய அமைச்சர் எ.வ.வேலு நெடுஞ்சாலைத்துறை அலுவலர்களுக்கு உத்தரவிட்டிருந்தார். அன்படி அங்கு சாலையை அதிகாரிகள் ஆய்வு மேற்கொண்டதில் சாலையின் தரம் மற்றும் அமைப்பில் குறைபாடு இருப்பது உறுதி செய்யப்பட்டது.
இதைத்தொடர்ந்து, தரமற்ற சாலைகளை அமைத்த அலுவலர்களான உதவி கோட்ட பொறியாளர் மாரியப்பன், உதவி பொறியாளர் மருதுபாண்டி மற்றும் தரக்கட்டுப்பாட்டு உதவி பொறியாளர் நவநிதி ஆகியோரை தற்காலிக பணியிடைநீக்கம் செய்து உத்தரவு பிறப்பிக்கப்பட்டிருக்கிறது. அதுமட்டுமின்றி சாலை பணி ஒப்பந்ததாரர் தர்ஷன் அண்ட் கோ-வின் ஒப்பந்தத்தை ரத்து செய்தும் உத்தரவிடப்பட்டிருக்கிறது.
தரமற்ற சாலையை அமைத்தவர்கள் பணியிடைநீக்கம் செய்யப்பட்டிருக்கும் நடைமுறை என்பது திமுக ஆட்சி பொறுப்பேற்ற பிறகு முதல் சம்பவமாக நடைபெற்றிருகிறது. முதல்வர் ஸ்டாலின் அறிவுறுத்தலின்பேரில் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டு உள்ளது.