சென்னை: தமிழ்நாடு சிறுபான்மையினர் ஆணையத்தின் தலைவராக காங்கிரஸ் மூத்த தலைவர் பீட்டர் அல்போன்ஸ் இன்று பதவி ஏற்றுக் கொண்டார். அவரைத் தொடர்ந்து மற்ற உறுப்பினர்களும் பதவி ஏற்றுக்கொண்டனர். சென்னை அண்ணா சாலையிலுள்ள தேவநேயப்பாவாணர் நூலக வளாகத்திலுள்ள அரங்கத்தில் பதவி ஏற்பு விழா எளிமையாக நடைபெற்றது.
தமிழ்நாட்டில் வசிக்கும் சிறுபான்மையினரின் கல்வி, சமூக மற்றும் பொருளாதார மேம்பாட்டுக்காக தமிழ்நாடு சிறுபான்மையினர் ஆணையம் செயல்பட்டு வருகிறது. இந்த ஆணையம், 1989-ம் ஆண்டு டிசம்பர் 13-ல் அப்போதைய முதல்வர் கருணாநிதியால் அமைக்கப்பட்டது. இதன் பிறகு 2010-ம் ஆண்டு மாநில சிறுபான்மையினர் ஆணையச் சட்டத்தின்படி சட்டப்பூர்வ அதிகாரம் பெற ஆணையமாகவும் செயல்பட்டு வருகிறது.
இந்த ஆணையத்தின் தலைவராக காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவரான எஸ்.பீட்டர் அல்போன்ஸை ஜூன் 29ந்தேதி அன்று நியமித்து, முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிவித்திருந்தார். அதையடுத்து, நேற்று (ஜூலை 6ந்தேதி) உறுப்பினர்கள் விவரம் அறிவிக்கப்பட்டது.
இந்த நிலையில், சென்னை அண்ணா சாலையில் உள்ள தேவநேய பாவணர் நூலக வளாகத்தில் உள்ள அலுவலகத்தில் உள்ள அரங்கத்தில், பீட்டர் அல்போன்ஸ் இன்று காலை மாநில சிறுபான்மைய ஆணைய தலைவராக பொறுப்பேற்றுக்கொண்டார். அவரைத் தொடர்ந்து துணை தலைவராக நியமிக்கப்பட்ட டாக்டர் மஸ்தான் உள்பட உறுப்பினர்கள் 6 பேரும் பொறுப்பேற்றுக்கொண்டனர்.
உறுப்பினர்கள் ஏ.பி.தமீம், அன்சாரி, ஹர்பஜன் சிங் சூரி, மன்ஞ்ஜித் சிங் நய்யர், பைரேலால் ஜெயின், டாக்டர் எஸ்.டான்பாஸ்க்கோ, டாக்டர் எம்.இருதயம் மற்றும் பிக்கு மௌரியார் புத்தா ஆகியோரும் பதவி ஏற்றுக்கொண்டனர்.
பதவி ஏற்றதும் செய்தியாளர்களை சந்தித்த பீட்டர் அல்போன்ஸ், சிறுபான்மையினர் மீது முதலமைச்சர் பேரன்பு கொண்டுள்ளதாகவும், சிறுபான்மையினர் ஆணையத்துக்கு புத்துயிர் ஊட்டியுள்ளார் என்றும் புகழாரம் சூட்டினார். மேலும், சிறுபான்மையினர் உரிமை மற்றும் வாழ்வாதாரத்தை காக்க நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் உறுதி அளித்தார்.