நாடு முழுவதும் நாளை முதல் (ஜூலை 1 முதல்) பல்வேறு புதிய நடைமுறைகள் அமலுக்கு வருகிறது. அதன்படி, ஓட்டுநர் உரிமம், ஏடிஎம் கட்டணம், ரேசன் கடைகளில் விரல் ரேகை உள்பட பல்வேறு விதிமுறைகள் அமலாகின்றன.
ஓட்டுநர் உரிமம்:
ஓட்டுநர் உரிமத்தைப் பெற, இனி பொதுமக்கள் போக்குவரத்து அலுவலகத்திற்கு (RTO) செல்ல வேண்டியதில்லை. புதிய விதிகளின்படி, ஜூலை 1 முதல் இனி ஓட்டுநர் பயிற்சிப் பள்ளிகளிலே அதற்கான பயிற்சியை முடித்து விட்டு ஓட்டுநர் உரிமத்தைப் பெறலாம்.
வங்கி பரிவர்த்தனை:
எஸ்பிஐ வாடிக்கையாளர்களுக்கான ஏடிஎம் கட்டணம் குறித்து விதிகளை மாற்றிய உள்ளது. அவை ஜூலை 1 ஆம் தேதி நடைமுறைக்கு வருகின்றன. அதன்படி,
ஸ்டேட் பாங்க் ஆப் இந்தியா (எஸ்பிஐ) வாடிக்கையாளர்கள், ஏடிஎம் மூலமாக ஒரு மாதத்தில் நான்கு முறை மட்டுமே இலவசமாக பரிவர்த்தனைகள் மேற்கொள்ள முடியும்.அதற்கு மேல் உபயோகித்தால் கூடுதலாக ரூ .15 + ஜிஎஸ்டி கட்டணங்கள் செலுத்த வேண்டும்.
எல்பிஜி விகிதங்கள் நிர்ணயம்:
எண்ணெய் நிறுவனங்கள் சந்தை ஏற்ற இறக்கங்கள், தேவை மற்றும் விநியோக இடைவெளியின் படி,ஜூலை 1 முதல் ஒவ்வொரு பதினைந்து நாட்கள் இடைவெளியில் திரவ பெட்ரோலிய எரிவாயு (எல்பிஜி) அல்லது சமையலறை எரிவாயுவின் விலைகள் நிர்ணயிக்கப்படவுள்ளன.
வருமான வரி
மத்திய அரசானது ‘விவாட் சே விஸ்வாஸ்’ திட்டத்தின் கீழ் வருமான வரி செலுத்துவதற்கான கட்டணத்தை வட்டி இல்லாமல் ஜூன் 30 முதல் ஆகஸ்ட் 31 வரை இரண்டு மாதங்களுக்கு நீட்டித்துள்ளது.
ரேசன் கடைகளில் விரல்ரேகை பதிவு
தமிழகத்தில் ரேசன் கடைகளில் பொருட்கள் வாங்க, சம்பந்தப்பட்ட குடும்பத்தினரின் விரல் ரேகை பதிவு அவசியம் என்ற நடைமுறை நாளை முதல் அமலுக்கு வருகிறது.