பெங்களூர்: கர்நாடக அணைகளில் இருந்து தமிழகத்துக்கு திறக்கப்பட்டு வந்த காவிரிநீரின் அளவு விநாடிக்கு 5 ஆயிரம் கன அடியாக குறைக்கப்பட்டுள்ளது.

தமிழகத்திற்கு ஜூன் மாதம் திறக்க வேண்டிய காவிரி நீரை  திறந்து விடும்படி கர்நாடக மாநில அரசுக்கு காவிரி மேலாண்மை ஆணையம் கடந்த வாரம் உத்தரவிட்டிருந்தது. இதற்கிடையில்,  கர்நாடகாவில் காவிரி நீர்ப்பிடிப்புப் பகுதிகளில் கனமழை பெய்ததால் கடந்த 20-ம் தேதி கிருஷ்ணராஜசாகர், கபினி ஆகிய அணைகளில் இருந்து தமிழகத்துக்கு திறந்து விடப்பட்டு வருகிறது.
விநாடிக்கு 10 ஆயிரம் கன அடி நீர் திறந்துவிடப்பட்டது. இந்நிலையில் காவிரி நீர்ப்பிடிப்பு பகுதிகளில் மழைப் பொழிவின் அளவு குறைந்ததால் அணைகளுக்கு நீர்வரத்து குறைந்துள்ளது. இதையடுத்துதண்ணீர் திறப்பை 5ஆயிரம் கன அடியாக கர்நாடக அரசு குறைத்துள்ளது.

கர்நாடக மாநிலத்தில் உள்ள கபினி அணையின் நீர்மட்டம் 2286.50 அடியாக உயர்ந்துள்ளது. அணையிலிருந்து விநாடிக்கு 700கன அடி நீர் திறந்துவிடப்பட்டுள்ளது. கிருஷ்ணராஜசாகர் அணையில் இருந்து திறக்கப்பட்டுள்ள 6471 கன அடி நீரில் 1471 கன அடி நீர் பாசனத் தேவைக்காக திறக்கப்பட்டுள்ளது.

மீதமுள்ள 5 ஆயிரம் கன அடி நீர் காவிரி ஆற்றில் தமிழகத்துக்கு திறந்துவிடப்பட்டுள்ளதாக காவிரி நீர்ப்பாசன கழகம் தெரிவித்துள்ளது.