சென்னை: மதுக்கடைகள் திறப்பதை காங்கிரஸ் கட்சி கொள்கை ரீதியாக ஆதரிக்காது என தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டித் தலைவர் கே.எஸ்.அழகிரி தெரிவித்துள்ளார்.
காங்கிரஸ் கட்சிதலைவர் ராகுல் காந்தியின் 51வது பிறந்தநாள் இன்று கொண்டாடப்பட்டு வருகிறது. இதையொட்டி, தமிழ்நாடு காங்கிரஸ் கட்சி சார்பில், சென்னை அடையாறு சாஸ்திரிநகர் பகுதியில் பொதுமக்களுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. தென்சென்னை கிழக்கு மாவட்ட காங்கிரஸ் கமிட்டி தலைவர் அடையாறு T.துரை ஏற்பாட்டில் சென்னை, அடையாறு தொலைபேசி இணைப்பகம் அருகில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த நிகழ்ச்சியில் தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் திரு. கே.எஸ். அழகிரி அவர்கள் பங்கேற்று கொரோனாவினால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நலத்திட்ட நிவாரண உதவிகளை வழங்கினார். இந்நிகழ்வில் தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி முன்னாள் தலைவர் திரு. கே.வீ. தங்கபாலு உள்பட பலர் பங்கேற்றனர்.
இந்த நிகழ்ச்சியில், கட்சித்தலைவர் கே.எஸ்.அழகிரி கலந்து கொண்டு நலத்திட்ட உதவிகளை வழங்கினார். பின்னர் செய்தியாளர்களை சந்தித்தபோது, தமிழக அரசு மதுக்கடை களை திறப்பதை காங்கிரஸ் கட்சி கொள்கை ரீதியாக ஒருபோதும் ஆதரிக்காது. கர்நாடக அரசுக்கு மேகதாது அணையை கட்டுவதற்கான அனுமதியை மத்திய அரசு வழங்கக்கூடாது என்று தெரிவித்த அவர், இது அரசியல் அல்ல என்றும் லட்சக்கணக்கான மக்களின் வாழ்க்கை என்பதை மத்திய அரசு உணர வேண்டும் என்றும் தெரிவித்தார்.