சென்னை: தமிழகஅரசு செயல்படுத்தி வரும் கல்வித் தொலைக்காட்சியில் புதிய கல்வியாண்டுக்கான பாடங்களை முதல்வர் மு.க.ஸ்டாலின் நாளை தொடங்கி வைக்கிறார்.
கொரோனா தொற்று பரவல் காரணமாக, கடந்த ஓராண்டுக்கும் மேலாக கல்வி நிறுவனங்கள் அடைக்கப்பட்டு உள்ளன. இதனால் தனியார் பள்ளிகள் ஆன்லைன் மூலம் வகுப்புகளை நடத்தி வருகின்றன. தமிழகஅரசு கல்வித்தொலைக்காட்சி மூலம் கடந்த ஆண்ட மார்ச் முதல் அரசு பள்ளி மாணாக்கர்களுக்கு பாடங்களை நடத்தி வருகிறது.
இந்த நிலையில், கொரோனா இரண்டாவது அலையின் தாக்கம் நீடிப்பதால் தமிழ்நாட்டில் பள்ளிகள் இப்போது திறக்கப்படாது என பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி கடந்த சில நாள்களுக்கு முன்பு தெரிவித்திருந்தாா். அதையடுத்து, நடப்பு கல்வியாண்டிலும் அரசு பள்ளி மாணாக்கர்களுக்கு கல்வி போதிக்கும் வகையில் நாளை முதல் மீண்டும் கல்வித்தொலைக்காட்சி நடைமுறைக்கு வருகிறது.
புதிய கல்வியாண்டுக்கான (2021-2022) பாடங்கள் சார்ந்த காணொலிகளை கல்வித் தொலைக்காட்சி மூலமாக முதல்வர் மு.க.ஸ்டாலின் நாளை தொடங்கி வைக்கிறார். சென்னை அண்ணா நூற்றாண்டு நூலகத்தில் காலைகாலை இதற்கான நிகழ்ச்சி நடைபெற உள்ளது. அதைத்தொடா்ந்து அரசுப் பள்ளி மாணவா்களுக்கு விலையில்லா பாடநூல்களையும் அவா் வழங்க இருப்பதாக தெரிவிக்கப்பட்டு உள்ளது.