கோவை: கோவை அருகே யானைகளை காட்டுக்குள் விரட்ட முயன்ற யானை வனக்காவலர் யானை மிதித்து பலியானார்.
கோவையை அடுத்த மதுக்கரை குரும்பபாளையம் பகுதியில் காட்டு யானை ஒன்று புகுந்து பயிர்களை நாசம் செய்து வருகிறது. அந்த யானையை பிடிக்க கும்கி யானைகள் மூலம் முயற்சி செய்யப்படுகிறது.
இந்த நிலையில், இரவு நேரத்தில் மதுக்கரை மார்க்கெட், நாச்சிபாளையம், வழுக்குபாறை வழியாக கண்ணமநாயக்கனூர் கிராமத்துக்குள் அந்த யானை புகுந்தது. அந்த வழியாக சென்ற பால் வியாபாரி குமார், சின்னத்துரை ஆகிய இருவரையும் யானை துரத்தியது. ஓடும்போது தவறி விழுந்த இருவரும் படுகாயம் அடைந்தார்கள்.
இந்தத் தகவல் கிடைத்ததும், காட்டு யானையை விரட்டுவதற்காக வனத்துறையினர் சம்பவ இடத்துக்கு சென்றார்கள். வன ஊழியர் முத்துசாமி (வயது 53) என்பவர் யானை நிற்கும் இடத்துக்கு சென்று ஒரு மரத்தின் மீது ஏறி கண்காணித்தார். பொதுமக்கள் விரட்டியதால் அந்த யானை மரத்தை நோக்கி ஓடி வந்தது. இதை பார்த்து அதிர்ச்சி அடைந்த முத்துசாமி மரத்தில் இருந்து வேகமாக இறங்கி தப்பி ஓட முயன்றார்.
அப்போது அவர் யானையிடம் சிக்கினார். யானை துதிக்கையால் வளைத்து அவரை தூக்கி வீசியது. அவர் தப்பியோட முயற்சிப்பதற்குள் யானை ஆவேசமாக முத்துசாமியை மிதித்து கொன்றது.
தொடர்ந்து யானை அங்கேயே நின்றதால், முத்துசாமியின் உடலை மீட்க முடியவில்லை. இதையடுத்து கும்கி யானை சம்பவ இடத்துக்கு வரவழைக்கப்பட்டு, முத்துசாமியின் உடல் மீட்கப்பட்டது.
வனத்துறையில் கடந்த முப்பது ஆண்டுகளாக பணியாற்றிய முத்துசாமிக்கு மனைவியும், ஒரு மகனும், ஒரு மகளும் உள்ளனர்.
இதுபோல காட்டு யானைகள் ஊருக்குள் வருவதற்குக் காரணம், அதன் வழித்தடத்தை மறித்து கட்டிடங்கள் கட்டுவதுதான் என்று வன ஆர்வலர்கள் கூறுகிறார்கள்.
“வனப்பகுதியில் யானை குறிப்பிட்ட பாதையில்தான் செல்லும். அந்த பகுதிகளில் அத்துமீறி மனிதர்கள் நுழைந்து கட்டிடங்களை கட்டிவிடுகிறார்கள். அதனால் வழி தெரியாமல் ஆத்திரமாகும் காட்டு யானைகள் ஊருக்குள் நுழைந்துவிடுகின்றன. அதேபோல வனத்தில் இருக்கும் நீர் ஆதாரங்களையும் மனிதர்கள் அழித்து, கட்டிடங்களை கட்டுகிறார்கள். இதனால் தண்ணீர் தேவைக்காகவும் யானைகள் ஊருக்குள் நுழைந்துவிடுகின்றன. பயத்தில், எதிர்ப்படும் மனிதர்களை மிதித்துக் கொல்கின்றன” என்று வன ஆர்வலர்கள் கூறுகிறார்கள்.
கோவை மாவட்ட ஆட்சியராக அர்ச்சனா பட்நாயக், பொறுப்பேற்றபோதே, “யானை வழித்தடங்களை ஆக்கிரமித்து கட்டப்பட்டிருக்கும் கட்டிடங்கள் அகற்றப்படும்” என்றார்.
அவரை தொடர்புகொண்டு தற்போதைய சம்பவம் குறித்து கேட்டோம். அவர், “வனத்துறை ஊழியர் பலியானது மிகுந்த வருத்தம் அளிக்கிறது. யானை வழித்தடங்களில் இருக்கும் ஆக்கிரமிப்புகள் அகற்றப்பட்டு வருகின்றன. அந்த பணிகள் இன்னமும் துரிதப்படுத்தப்பட்டு விரைவில் முழு அளவில் ஆக்கிரமிப்புகள் அகற்றப்படும்” என்றார்.