சென்னை: 10 ஆம் வகுப்பு முடித்த மாணவர்கள் 11 ஆம் வகுப்பில் சேர பள்ளி அளவிலான நுழைவுத் தேர்வு நடத்தப்படும் என்ற முந்தைய அறிவிப்பு வாபஸ் பெறப்படுவதாக பள்ளிக்கல்வித் துறை தெரிவித்துள்ளது.

கொரோனா அச்சுறுத்தல் மற்றும் பொதுமுடக்கம் காரணமாக தமிழகத்தில் 1வது முதல் 12ம் வகுப்பு வரை அனைவரும் தேர்ச்சி பெற்றதாக அறிவிக்கப்பட்டு உள்ளது. இதையடுத்து, 11ம் வகுப்புகளுக்கு அந்தந்த பள்ளிகளே நுழைவுத்தேர்வு நடத்தி மாணவர்களை சேர்த்துக்கொள்ளலாம் என பள்ளிக்கல்வித்துறை அறிவித்தது. இது சர்ச்சையை ஏற்படுத்தியது. இதையடுத்து அந்த அறிவிப்பு வாபஸ் பெறப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இது தொடர்பாக பள்ளிக்கல்வி ஆணையர் வெளியிட்டுள்ள அறிவிப்பில்,  மிக அதிகப்படியான விண்ணப்பங்கள் எந்த பிரிவுகளுக்கு வரப்பெறுகிறதோ, அச்சூழலில், அதற்கென விண்ணப்பித்த மாணவர்களின் 9 ஆம் வகுப்பு மதிப்பெண்களை அடிப்படையாக கொண்டு மாணவர்களின் விருப்பத்தின்படி பிரிவுகளை ஒதுக்கீடு செய்யவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது. அனுமதிக்கப்பட்ட இடங்களுக்கு மேல் மாணவர்கள் சேர்க்கை கோரும் நிலையில் கொரோனா காரணமாக ஒவ்வொரு பிரிவிலும் 10 முதல் 15 சதவிகிதம் கூடுதலாக மாணவர்களை சேர்க்கவும் அனுமதி வழங்கப்பட்டுள்ளது.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.