சென்னை: தனது சுற்றுப்பயணத்தின்போது எளிமையான உணவுகளே போதும், ஆடம்பரம் வேண்டாம் என தமிழக  தலைமைச்செயலாளர் இறையன்பு மாவட்ட ஆட்சியர்களுக்கு அறிவுறுத்தி உள்ளார்.

தமிழகத்தில் ஸ்டாலின் தலைமையிலான திமுக அரசு பதவி ஏற்றதும், மாநில தலைமைச்செயலாளராக இளையன்பு ஐஏஎஸ் நியமிக்கப்பட்டார். இதையடுத்து, தமிழகஅரசின் பல்வேறு நடவடிக்கைகளில் தமிழுக்கான முக்கியத்துவம் வழங்கப்பட்டு வருகிறது. மேலும், தமிழக முன்னேற்றத்துக்கான பணிகளை முதல்வர் மற்றும் ஆட்சியாளர்களுடன் இணைந்து செயலாற்றி வருகிறார்.

இவர் கடந்த வாரம், கொரோனா தடுப்பு நடவடிக்கைகள் தொடர்பாக  மாவட்டங்களுக்கு நேரில் சென்று ஆய்வு செய்தார். அப்போது, மாவட்ட ஆட்சித்தலைவர்களுக்கு பல்வேறு அறிவுரைகளை கூறினார். மாவட்ட விஜயத்தின்போது, அவருக்கு மாவட்ட நிர்வாகம் சார்பில் உணவு மற்றும் தங்குமிடம் ஏற்பாடு செய்யப்படுவது வழக்கம்.

இந்த நிலையில், தற்போது மாவட்ட ஆட்சியர்களுக்கு ஒரு சுற்றறிக்கை அனுப்பி உள்ளார். அதில்,  தனது சுற்றுப்பயணத்தின்போது எளிய வகையிலான உணவுகளே போதும் என்று அறிவுறுத்தி உள்ளார். காலையில் எளிமையான வகையில் காலை உணவும், மற்ற இரு வேளைகளிலும் சைவ உணவு மட்டுமே ஏற்பாடு செய்ய வேண்டும். அதில் அதிகபட்சமாக  இரண்டு காய்கறி கூட்டு, பொறியல்கள் இருந்தாலே போதுமானது.  விரிவான ஏற்பாடுகள் தேவையில்லை என்று தெளிவுபடுத்தியதுடன், ஆடம்பரமான ஏற்பாடுகளை தயவுசெய்து தவிர்க்கவும் என தெரிவித்து உள்ளார்.

தலைமைச்செயலாளரின் இந்த சுற்றறிக்கை மாவட்ட ஆட்சியர்களிடையே வரவேற்பை பெற்றுள்ளது.