நீலகிரி:
இந்தியாவிலே தடுப்பூசி செலுத்தி கொண்ட முதன்மை மாவட்டமாக நீலகிரி மாவட்டத்தினை மாற்ற அனைத்து வகையான நடவடிக்கைகளும் எடுக்கப்பட்டு வருகிறது என கலெக்டர் இன்னசென்ட் திவ்யா தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து அவர் மேலும் தெரிவிக்கையில், தோட்ட தொழிலாளர்களுக்கு தடுப்பூசி செலுத்தியதில், நீலகிரி மாநிலத்தில் முதலிடத்தில் உள்ளது.நீலகிரி, வால்பாறை, தேனி உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில், ஒரு லட்சம் தோட்ட தொழிலாளர்கள் பணிபுரிகின்றனர்.
தேயிலை தோட்ட தொழிலாளர்களை பரிசோதனைக்கு உட்படுத்தி அந்தந்த நிறுவனங்கள் பணியமர்த்தி வருகின்றனர், மாநில அரசு உத்தரவுப்படி, தோட்ட தொழிலாளர்களுக்கு முன்னுரிமை அளிக்கப்பட்டு கொரோனா தடுப்பூசி செலுத்தப்பட்டு வருகிறது.அதில், நீலகிரியில், பந்தலுார், கூடலுார், குன்னுார், கோத்தகிரி, குந்தா உள்ளிட்ட பகுதிகளில் உள்ள, 9,000 தோட்ட தொழிலாளர்களில், 8,000 தோட்ட தொழிலாளர்களுக்கு செலுத்தப்படுள்ளது.
இதுமட்டுமின்றி மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் தெரிவித்துள்ளபடி, தேயிலை தொழிற்சாலையில் பணியாற்றும் தொழிலாளர்களுக்கு முன்னுரிமை அளித்து கொரோனா தடுப்பூசி போடுவதற்கு தேவையான செயல் திட்டம் வகுக்கப்பட்டுள்ளது என்றும் அவர் தெரிவித்துள்ளார்.
மேலும் பேசிய அவர், நீலகிரியில், 90 சதவீதம் தோட்ட தொழிலாளர்களுக்கு தடுப்பூசி செலுத்தப்பட்டு, மாநிலத்தில் நம் மாவட்டம் முதலிடத்தில் உள்ளது என்றும், இந்தியாவிலே தடுப்பூசி செலுத்தி கொண்ட முதன்மை மாவட்டமாக நீலகிரி மாவட்டத்தினை மாற்ற அனைத்து வகையான நடவடிக்கைகளும் எடுக்கப்பட்டு வருகிறது என்றும் அவர் கூறினார்.