சென்னை:
உயர் அதிகாரிகளுடன் முதல்வர் மு.க.ஸ்டாலின் நாளை ஆலோசனை நடத்த உள்ளார்.
கொரோனா வைரஸ் நோய்த் தொற்று பரவலைத் தடுப்பதற்காக, மத்திய அரசின் வழிகாட்டுதலின்படி, தமிழ்நாட்டில் தேசிய பேரிடர் மேலாண்மைச் சட்டத்தின்கீழ், ஊரடங்கு உத்தரவு குறிப்பிட்ட சில தளர்வுகளுடன் அமலில் இருந்து வருகிறது.
இதனிடையே, கொரோனா இரண்டாவது அலை தீவிரமாக பரவி வருவதால் அதனை கட்டுக்குள் கொண்டு வரும் பொருட்டு நடைபெற்ற ஆலோசனைக் கூட்டத்தில் எடுக்கப்பட்ட முடிவுகளின்படி, தமிழகத்தில் தளர்வுகளற்ற ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது. இதையடுத்து, இந்த ஊரடங்கு உத்தரவில் சில தளர்வுகள் அளிக்கப்பட்டு குறிப்பிட்ட சில கடைகள் மட்டும் காலை 6 முதல் மாலை 5 மணி வரை செயல்பட்டு வருகின்றன.
இந்த சூழலில் தீவிர ஊரடங்கு காரணமாக தமிழகத்தில் கொரோனா தொற்றின் எண்ணிக்கை குறைந்து வருகிறது. முழு ஊரடங்கிற்கு பலன் கிடைத்துள்ளது என்று சுகாதாரத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார். தமிழகத்தில் 30ஆயிரத்துக்கும் அதிகமாக இருந்த பாதிப்பு தற்போது 20 ஆயிரத்துக்கு கீழ் குறைந்துள்ளது.
இந்த நிலையில், தமிழக ஆளுநர் பன்வாரிலால் புரோகித்தை இன்று மாலை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் சந்தித்து பேசினார்.
தமிழகத்தில் அமலில் உள்ள ஊரடங்கு வரும் 14ஆம் தேதி முடிய உள்ளது. இந்நிலையில், உயர் அதிகாரிகளுடன் முதல்வர் மு.க.ஸ்டாலின் நாளை ஆலோசனை நடத்த உள்ளார். இந்த ஆலோசனையில் ஊரடங்கை நீடிப்பது, தளர்வுகள் அளிப்பது குறித்து ஆலோசிப்பார் என்று தெரிய வந்துள்ளது.