மக்களவைத் தேர்தலில் தனித் தொகுதியில் போட்டியிட வேட்புமனுவில் போலி ஜாதி சான்றிதழ் கொடுத்த வழக்கில் தெலுங்கு நடிகையும், சுயேச்சை எம்.பி.,யுமான நவ்னீத் கவுர் ராணாவுக்கு, மும்பை உயர்நீதிமன்றம் 2 லட்சம் ரூபாய் அபராதம் விதித்தது.

2019 மக்களவைத் தேர்தலில் அமராவதி லோக்சபா தனித் தொகுதியில் சுயேச்சை எம்.பி.,யாக போட்டியிட்டு வெற்றி பெற்று மக்களவை எம்.பி. ஆனார்.

இந்நிலையில்,தோல்வியுற்ற சிவசேனா கட்சி வேட்பாளர் ஆனந்த ராவ் , மும்பை உயர்நீதிமன்றத்தின் நாக்பூர் கிளையில் நவ்னீத் கவுர் ராணா தன்னை பட்டியலினத்தவர் என போலியான சாதி சான்றிதழ் கொடுத்து வேட்புமனு தாக்கல் செய்துள்ளார் என்று வழக்கு தொடர்ந்தார் .

இதில், நவ்னீத் கவுர் ராணாவின் ஜாதி சான்றிதழை ஆய்வு செய்ததில், அது போலியானது என நிரூபணமானது. இதையடுத்து அவரது ஜாதி சான்றிதழை ரத்து செய்த உயர்நீதிமன்றம், 2 லட்சம் ரூபாய் அபராதம் விதித்தும், ஆறு வாரங்களுக்குள் நவ்னீத் கவுர் ராணாவின் அனைத்து ஆவணங்களையும், நீதிமன்றத்தில் ஒப்படைக்கவும் உத்தரவிட்டது.

பிரபல தெலுங்கு நடிகை நவ்னீத் கவுர் ராணா, 35, தமிழில் அரசாங்கம், அம்பாசமுத்திரம் அம்பானி போன்ற படங்களில் நடித்துள்ளார்.