டில்லி
வரும் ஆகஸ்ட் மாதம் 1ஆம் தேதி முதல் விடுமுறை நாட்களிலும் வங்கிகளில் ஊதியம் ஓய்வூதியம், வட்டி உள்ளிடவை வழங்கும் சேவைகள் நடைபெற உள்ளன.
பொதுவாக ஊதியம், ஓய்வூதியம், வைப்புத் தொகைகளின் வட்டி, பங்குகளின் ஈவு தொகை ஆகியவை வங்கிகளின் மூலம் அளிக்கப்படுகிறது. மேலும் பல அரசு மற்றும் பெரிய தனியார் நிறுவனங்களில் மின்சாரம், தண்ணீர், ஆகியவற்றுக்கான கட்டணமும் அவ்வாறே செலுத்தப்படுகிறது. பொதுமக்களும் கடன் தவணைகள், காப்பீடு பிரிமியம் போன்றவற்றை அவ்வாறே செலுத்துகின்றனர்.
இவை அனைத்தும் மொத்த பணம் செலுத்தும் முறை மூலம் செலுத்தப்படுகிறது. இந்த சேவைகளை வங்கி விடுமுறை நாட்களில் பயன்படுத்த முடியாது. மேலும் இவற்றுக்கான பதிவுகளை செய்ய 2-3 வாரங்களோ ஆகும். இவற்றை உடனடியாக வாரத்தின் அனைத்து நாட்களிலும் செய்ய நிபுணர்கள் அறிவுறுத்தினர
அவ்வகையில் ரிசர்வ் வங்கி ஒரு அறிவிப்பை வெளியிட்டுள்ளது. அதில், “வங்கி வாடிக்கையாளர்களின் வசதியை மேலும் மேம்படுத்துவதற்கு தற்போது வங்கி வேலை நாட்களில் கிடைக்கும் மொத்த பணம் செலுத்தும் சேவைகள், 2021ம் ஆண்டு ஆகஸ்ட் 1ம் தேதி முதல் வாரத்தின் அனைத்து நாட்களிலும் கிடைக்க உத்தேசிக்கப்பட்டுள்ளது” என்று குறிப்பிடப்பட்டுள்ளது.
மேலும் இந்த நடவடிக்கையின் மூலம், வங்கிகளுடன் முறையான முதலீட்டுத் திட்டங்களைப் பதிவு செய்ய இதே அமைப்பு பயன்படுத்தப்படுவதால் முன்கூட்டிய பதிவும் விரைவானதாக மாறும் என்றும் கூறப்பட்டுள்ளது.