சென்னை: பள்ளி மாணவிகளுக்கு பாலியல் தொல்லை கொடுத்த வழக்கில் கைது செய்யப்பட்ட ஆசிரியர் ராஜகோபாலன் ஜாமின் மனுவை போக்சோ நீதிமன்றம் தள்ளுபடி செய்துள்ளது.

சென்னை கே.கே. நகரில் பத்ம சேஷாத்ரி பாலபவன் பள்ளியில் ஆசிரியராக பணியாற்றி வரும் ராஜகோபாலன்,  மாணவிகளுக்கு பாலியல் தொல்லை கொடுத்ததாக எழுந்த புகாரின்பேரில் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டு உள்ளார்.

இதற்கிடையில், ஜாமின்கோரி ஆசிரியர் ராஜகோபாலன்,  சென்னை போக்சா சிறப்பு நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்திருந்தார். இந்த மனு போக்சா சிறப்பு நீதிமன்ற நீதிபதி முகமது பாரூக் முன்பு  விசாரணைக்கு வந்தது. அப்போது, காவல்துறை தரப்பில் ஆஜரான வழக்கறிஞர் விசாரணை ஆரம்ப கட்டத்தில் உள்ளது எனவும், விசாரணை இன்னும் முழுமையாக முடிவடையவில்லை, எனவே ஜாமீன் வழங்க கூடாது எனவும் வாதிட்டார். ஆசிரியர் தரப்பில் ஆஜரான வழக்கறிஞர்,  உள்நோக்கத்துடன்  வழக்கு தொடரப்பட்டு இருப்பதாகவும்,   ஜாமீன் வழங்கினால் நீதிமன்றம் விதிக்கும் நிபந்தனைகளை ஏற்க தயாராக உள்ளதாகவும் தெரிவிக்கபட்டது.

அனைத்து தரப்பு வாதங்களுக்கு பிறகு உத்தரவிட்ட நீதிபதி, விசாரணை இன்னும் முழுமையாக முடிவடையாததால், தற்போது ஜாமீன் வழங்க முடியாது என தெரிவித்து மனுவை தள்ளுபடி செய்து உத்தரவிட்டார்.