திருவனந்தபுரம்
கே எஸ் ஆர் டி சி என்னும் பெயர் கேரள மாநில போக்குவரத்து துறைக்குச் சொந்தம் என்பதால் அதைக் கர்நாடகா பயன்படுத்த தடை விதிக்கப்பட்டுள்ளது.
கேரள மாநில அரசு போக்குவரத்து கழகம் ஆங்கிலத்தில் கேரள ஸ்டேட் ரோட் டிரான்ஸ்போர்ட் கார்ப்பரேஷன் என அழைக்கப்படுகிறது. இதைப் போல் கர்நாடக மாநில அரசு போக்குவரத்துக் கழகம் கர்நாடகா ஸ்டேட் ரோட் டிரான்ஸ்போர்ட் கார்ப்பரேஷன் என ஆங்கிலத்தில் சொல்லப்படுகிறது. இரண்டுமே சுருக்கமாக கே எஸ் ஆர் டி சி எனக் கூறப்படுகிறது.
இதனால் பெரும் குழப்பம் ஏற்பட்டது. கர்நாடக மாநில பேருந்துகள் கேரளாவுக்கும் கேரள மாநில பேருந்துகள் கர்நாடகாவுக்கும் சென்று வருவதால் இந்த குழப்பம் மேலும் அதிகரித்தது. கடந்த 2014 ஆம் ஆண்டு கர்நாடக அரசு இந்த எழுத்துக்கள் தங்கள் போக்குவரத்து கழகத்துக்குச் சொந்தம் எனவும் அதைக் கேரளா பயன்படுத்தக் கூடாது எனவும் நோட்டிஸ் அனுப்பியது.
கேரள போக்குவரத்து கழகத்தில் அப்போது நிர்வாக இயக்குநராக இருந்த ஆண்டனி சாக்கோ மத்திய அரசு வணிக முத்திரை பதிவுத் துறையில் வழக்கு தொடர்ந்தார். சுமார் 7 ஆண்டுகளாக நடந்து வந்த இந்த வழக்கில் கே எஸ் ஆர் டி சி என்னும் எழுத்தைப் பயன்படுத்தக் கேரளாவுக்கு உரிமை உள்ளதாகத் தீர்ப்பு வழங்கப்பட்டது. இதையொட்டி கர்நாடகா இந்த எழுத்துக்களைப் பயன்படுத்த தடை விதிக்கப்பட்டுள்ளது.