சென்னை: திருமணம் செய்துகொள்வதாக கடந்த 5 ஆண்டுகளாக ஏமாற்றி குடும்பம் நடத்தி வந்த முன்னாள் அமைச்சர் மணிகண்டனை வரும் 9-ஆம் தேதி வரை கைது செய்யக் கூடாது என சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது.
திரைப்பட துணை நடிகை சாந்தினி என்பவர், அதிமுக முன்னாள் அமைச்சர் மணிகண்டன் மீது பாலியல் புகார் கொடுத்திருந்தார். அதில், தன்னை திருமணம் செய்வதாக கூறி 5 ஆண்டுகளாக தன்னுடன் ஒன்றாக வாழ்ந்து விட்டு ஏமாற்றி விட்டதாகவும், ஒன்றாக இருந்தபோது எடுக்கப்பட்ட அரை நிர்வாண படங்களை சமூக வலைதளங்களில் வெளியிடுவதாக மணிகண்டன் மிரட்டியதாகவும் தெரிவித்தார்.
இந்த புகாரின் பேரில், முன்னாள் அமைச்சர் மணிகண்டன் மீது சென்னை அடையாறு அனைத்து மகளிர் காவல் நிலைய போலீசார் 5 பிரிவுகளில் வழக்குப்பதிவு செய்துள்ளனர். இதனால், தலைமறைவான மணிகண்டன், முன்ஜாமீன் கோரி உயர்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்து இருந்தார்.
இந்த மனுமீதான விசாரணை இன்று நடைபெற்றது. அப்போது, மணிகண்டனுக்கு முன்ஜாமீன் வழங்கக் கூடாது என உயர்நீதிமன்றத்தில் நடிகை சாந்தினி தரப்பில் ஆட்சேபனை மனு தாக்கல் செய்யப்பட்டது. இதையடுத்து, வழக்கை 9-ஆம் தேதிக்கு ஒத்தி வைத்த நீதிமன்றம், அதுவரை மணிகண்டனை கைது செய்யக் கூடாது என உத்தரவு பிறப்பித்துள்ளது.