raamanna

நேற்று அலுவல் காரணமாக ஏர் இண்டியாவில் டில்லி பயணம். எதிர்பாராத விதமாக பக்கத்தில் நண்பர். சமூக ஆர்வத்துடன் சில படங்களை தயாரித்தவர். கை சுட்டுக்கொண்டதால் தற்போது ஒதுங்கியிருக்கிறார்.

” புதுப் படத்துக்கு லொகேஷன் பார்க்கவா?” என்றேன்.

அவ்வளவுதான் பொரிந்து தள்ளிவிட்டார் மனிதர்: “சினிமாவ விட்டே விலகலாம்னு இருக்கேன்..” என்று ஆரம்பித்தவர், அங்கு நடக்கும் கசப்பான பல விசயங்களை பட்டியல் போட ஆரம்பித்து முடித்தார். (அதை இன்னொரு முறை சொல்கிறேன்.)

ramadoss-sandanam1

பேச்சு, மதுவிலக்கு பற்றி திரும்பியது. விட்ட மழை மீண்டும் அடிக்க ஆரம்பிக்குமே.. அது மாதிரி மீண்டும் அடி பின்ன ஆரம்பித்துவிட்டார்.

அவரது ஆதங்கம் அப்படியே…

“ஆடி மாத மதுவிலக்கு சுனாமியில் அய்யா ஆடிப்போய்க்கிடக்கிறார். . மது என்றாலே ஆளாளுக்கு தாக்குவது கருணாநிதியைத்தான். ஆனால் அவரே, ” ராமதாஸ்,  தான் கூட்டணி  அமைக்கும் கட்சிகளிடம் மதுவிலக்கு குறித்து நிபந்தனை விதித்திருக்கிறாரா ” என்று கேட்டு “ராமதாசின் மது எதிர்ப்புதான் நாடகம்” என்று சொல்லாமல் சொல்லி டென்சன் ஏற்றி இருக்கிறார் .

அதுமட்டுமல்ல.. “மது உற்பத்தியாளர்கள் வீசிஎறியும் பணத்திற்கு அடிமையாகி திரைத்துறையினர் மது காட்சிகளை வைக்கிறார்கள். இனி மது குடிக்கும் காட்சிகள் வைத்தால் பா.ம.க.சார்பில் போராட்டங்கள் நடத்தப்படும்” என்றெல்லாம் ராமதாஸ் பேசுவதும் நாடகம்தான்” என்கிறார்கள் திரைத்துறையினர்.

அவர்கள் சொல்வதிலும் நியாயம் இருக்கிறது.

ரஜினிகாந்த், புகை பிடிப்பது போன்ற காட்சிகளில் நடிக்கிறார் என்பதற்காக ரஜினியும், அவருடைய பாபா படமும் பட்டபாட்டை யாரும் மறந்திருக்க முடியாது.

அதே மாதிரி, விஜயகாந்தின் கஜேந்திரா படமும் இவர்களிடம் படாத பாடுபட்டது வரலாறு. அநத படத்தை வெளியிட முடியாத நிலையில் தயாரிப்பாளர் துரை, ராமதாஸை சந்தித்து கெஞ்சி கூத்தாடி படத்தை வெளியிட்டார்.

ramadoss-sandanam2

இப்படி உச்ச நடிகர் ரஜினி, அரசியல் நடிகர் விஜயகாந்த் என்று எல்லோர் கண்ணிலும் விரலைவிட்டு ஆட்டுபவர்தான் ராமதாஸ்.

அவரது மகன் அன்புமணியும் சாமான்யபட்டவரா? மத்திய சுகாதாரத்துறை அமைச்சராக இருந்தபோது, ஒட்டுமொத்த இந்திய நடிகர்களுக்கு, “புகைபிடிக்கும் காட்சிகளில் நடிக்கக்கூடாது” என்று அறிவுரை சொன்னவர். சமீபத்தில்கூட, “நாங்கள் சொல்லி ரஜினி கமல் உள்ளிட்ட நடிகர்களே புகை காட்சியில் நடிப்பதை விட்டுவிட்டார்கள். தனுஷூம் திருந்தவேண்டும்” என்று அறிக்கைவிட்டவர்.

ஆனால், ராமதாஸும் அன்புமணியும் ம் சந்தானம் என்கிற நடிகர் இருப்பதே தெரியாத மாதிரி நடிக்கிறார்கள்.

இவர் அறிமுகமான மன்மதன் படத்திலிருந்து விரைவில் வரப்போகும் “வாசுவும் சரவணனும் ஒண்ணா படிச்சவங்க” படம் வரை இவர் நடிக்காத படம் வேண்டுமானால் இருக்கலாம் ஆனால் குடிக்காத படமே இல்லை. இவரது கேரக்டரே நடமாடும் டாஸ்மாக் பார் என்பதாகத்தான் உருவாக்கப்படுகிறது.

புகைப்பழக்கத்துக்கு எதிரான விழிப்புணர்வு பிரச்சாரங்களையே ‘ஆல் இன் ஆல் அழகுராஜா” படத்தில் கிண்டலடித்தவர் சந்தானம். இதை பல்வேறு அமைப்புகள் கண்டித்தன. ஆனால் ராமதாஸ் கப்சிப்!

ramadoss-sandanam3

“என்றென்றும் புன்னகை” படத்தில் பெண்களை மிகக் கேவலமாக கொச்சைப்படுத்தினார் சந்தானம். இதற்கும் பல தரப்பினர், எதிர்ப்பு தெரிவித்தார்கள். அவர்களில் ஒருவரான, மனித உரிமைகள் சர்வதேச கழகத்தின் மகளிர் அணி நிர்வாக செயலாளர் கல்பனா, “நடிகர் சந்தானம் ஒவ்வொரு படத்திலும் பாட்டிலும் கையுமாக வந்து பெண்களை கொச்சைப்படுத்தி பேசுகிறார்” என்று ஆதங்கத்தை வெளிப்படுத்தினார். அப்போதும்கூட ராமதாஸோ அன்புமணியோ கண்டிக்கவில்லை.

இதெல்லாம் சில உதாரணங்கள்தான். சம்பளம் வாங்காமல் கூட நடிப்பார் ஆனார் சரக்கடிக்காமல் நடிக்க மாட்டார் என்று பெயர் வாங்கியிருக்கிறார் சந்தானம்.

ஆனால்..  சந்தானம் என்றவுடன் வாயில் மாம்பழத்தை வைத்தமாதிரி அமைதி ஆகிவிடுகிறார்களே ராமதாஸும் அன்புமணியும்… ஏன்?

காரணம்… ராமதாசின் உறவினர் இந்த சந்தானம். ராமதாஸ் குடும்ப நிகழ்ச்சிகளில் சந்தானத்துக்கு தவறாமல் அழைப்பு உண்டு. சந்தானமும் கட்டாயம் கலந்துகொள்வார்.

ஆக… “பாமக சாதி பார்ப்பதில்லை. மது, புகையால் யாரும் பாதிக்கக்கூடாது என்று ஒட்டுமொத்த தமிழகத்துக்காகவும்தான் போராடுகிறோம்” என்று ராமதாஸ் அண்ட் சன் சொல்வது பொய்யா?

அப்படி இல்லை என்றால், அதை நிரூபிக்க ராமதாஸுக்கு ஒரு சிறந்த வாய்ப்பு இருக்கிறது.

சந்தானம் நடித்த , “வாசுவும் சரவணனும் ஒண்ணா படிச்சவங்க” என்ற திரைப்படம் வர இருக்கிறது. அந்தப்படத்துக்காகவது தங்களது எதிர்ப்பை ராமதாஸ் அண்ட் சன் தெரிவிக்க வேண்டும்.

ramadoss-sandanam4

ஏனென்றால், சமீபத்தில் வெளியிடப்பட்ட இந்த படத்தில் ஒரே சாராய வாடை.

“போலீஸ் அடிச்சாலும் உண்மைய சொல்லாதவனுங்க.. ஒரு பீர் அடிச்சா எல்லாத்தையும் கக்கிடுறானுங்க..” என்று ஒரு வசனம்.

“வாசுவும் சரவணன் ரெண்டு பேரும் ஒண்ணா படிச்சவங்க.. ஊருல உள்ள பார்களில் எல்லாம் ஒண்ணா குடிச்சவங்க” என்று ஒரு பாடல்.

ஐந்து நிமிட ட்ரெய்லரிலேயே இப்படி மதுநாற்றம் குடலைப்பிடுங்குகிறது என்றால், ஒட்டுமொத்த படம் எப்படி இருக்கும்?

அதுமட்டுமல்ல.. இந்த படத்தின் தலைப்பைச் சுருக்கி, “வி.எஸ்.ஓ.பி.” என்றுதான் விளம்பரப்படுத்தினார்கள். வி.எஸ்.ஓ.பி. என்பது ஒரு பிராந்தி வகை. இதற்கு பல தரப்பிலிருந்தும் கடும் எதிர்ப்பு கிளம்ப, “விளம்பரங்களில் இனி அப்படி பயன்படுத்துவதில்லை” என்று அறிவித்தது படக்குழு.

ஆனால் படத்தின் ட்ரைலர் வெளியீட்டுவிழாவில் பேசிய ஹீரோ ஆர்யா, காமெடியன் சந்தாம் இசையமைப்பாளர் இமான் எல்லோருமே வி.எஸ். ஓ.பி. என்றுதான் படத்தைக் குறிப்பிட்டார்கள்.

அதுமட்டுமல்ல.. சந்தானம் பேசும்போது, “இசைமையப்பாளர் இமான் பேசும்போது, வி.எஸ்.ஓ.பி. என்றால் என்னவென்று முதலில் எனக்குத் தெரியலைன்னு சொன்னார். நம்ம டீம்ல இருந்துகிட்டு வி.எஸ்.ஓ.பி. தெரியலையா.. இன்னைக்கு சாயந்திரமே பார்ட்டி வச்சிருவோம்” என்றார் உற்சாகமாக.

இந்த படத்தை ராமதாஸ் எதிர்க்க இன்னொரு முக்கிய காரணம் ஒன்று இருக்கிறு.

ramadoss-sandanam5

வரும் ஆகஸ்ட் 15 அன்று, மதுவிலக்கோ அல்லது மதுகுறைப்போ அறிவிக்க வேண்டும் என்று பல அமைப்புகள், கட்சிகள் தமிழக அரசிடம் எதிர்பார்க்கின்றன.

அன்றுதான் இந்த வி.எஸ்.ஓ.பி. படமும் வெளியாகிறது

ராமதாஸும் அன்புமணியும் உண்மையிலேயே மது எதிர்ப்பில் தீவிரமாக இருக்கிறார்கள் என்றால், இந்தப்படத்துக்கு தங்களது எதிர்ப்பைத் தெரிவிக்க வேண்டும்!”

– அந்த சினிமா பிரபலம் சொல்லி முடிக்கவும், விமானம் டில்லியை நெருங்குவதாக அறிவிப்பு வரவும் சரியாக இருந்தது. நான் சீட் பெல்ட்டை எடுத்து மாட்டிக்கொள்ள ஆரம்பித்தேன்.