காலனியாதிக்க காலத்தில் தற்போதைய நமீபியா நாட்டில் வாழ்ந்த ஹீர்ரோ மற்றும் நாமா இனத்தவரை ஜெர்மன் அரசு கொன்று குவித்தது, 1904 முதல் 1908 ம் ஆண்டு வரை நடந்த இந்த படுகொலைகள் 20 ம் நூற்றாண்டின் முதல் இன படுகொலை என்று வர்ணிக்கப்படுகிறது.

படுகொலைக்கு காரணமான ஜெர்மன் அரசு இந்த இன படுகொலைக்கு பொறுப்பேற்க வேண்டும் என்று 50 ஆண்டுகளுக்கும் மேலாக இரு நாடுகளுக்கும் இடையே பிரச்சனை நிலவி வந்தது.

ஹீர்ரோ மற்றும் நாமா இனத்தவரை கொன்று குவித்ததாக ஜெர்மன் மீது நிலவி வந்த குற்றச்சாட்டு பல்வேறு கட்ட பேச்சுவார்த்தைகளுக்கு பிறகு இறுதி கட்டத்தை எட்டி உள்ளது.

இன படுகொலை செய்ததை ஒப்புக்கொண்ட ஜெர்மன் அரசு அதற்காக நமீபிய மக்களிடம் மன்னிப்பு கோருவதாகவும், உரிய இழப்பீடு வழங்குவதாகவும் கூறியிருக்கிறது.

நமீபியா அரசுடன் ஜெர்மன் அரசு செய்து கொண்ட ஒப்பந்தத்தின் படி, இந்திய மதிப்பில் சுமார் 10,000 கோடி ரூபாயை நமீபிய அரசுக்கு இழப்பீடாக வழங்க உள்ளது.

இதுகுறித்து கருத்து தெரிவித்த ஹீர்ரோ மற்றும் நாமா இன பிரதிநிதிகள், இந்த பேச்சுவார்த்தை ஜெர்மன் அரசுக்கும் நமீபிய அரசுக்கும் இடையே நேரடியாக நடத்தப்பட்டது, இதில் எங்கள் ஆலோசனைகளை ஏற்கவில்லை.

இன படுகொலை செய்ததாக ஜெர்மன் ஒப்புக்கொண்டது விளம்பர நோக்கம் கொண்டது, இது எங்கள் இன மக்களை மட்டுமல்ல நமீபியா அரசையும் ஏமாற்றும் உத்தி என்று குறைகூறியுள்ளனர்.