நாசாவின் ஆய்வு ஹெலிகாப்டரான இன்ஜெனிட்டி ஏப்ரல் மாதம் முதன் முதலாக செவ்வாய் கிரகத்தின் மேற்பரப்பில் பறந்து ஆய்வு நடத்தியது.
இந்த ஆண்டு துவக்கத்தில் செவ்வாய் கிரகத்தில் சென்று இறங்கிய நாசாவின் விண்கலத்தின் ஒரு பகுதியாக அனுப்பிவைக்கப்பட்ட இன்ஜெனிட்டி இதுவரை ஐந்து முறை செவ்வாய் கிரகத்தின் மீது பறந்து ஆய்வு நடத்தி படம்பிடித்திருக்கிறது.
கடந்த வாரம் சனிக்கிழமையன்று ஆறாவது முறையாக செவ்வாய் கிரகத்தின் மீது பறந்து சென்ற இன்ஜெனிட்டி ஹெலிகாப்டரில் ஏற்பட்ட மின் கசிவு காரணமாக அதன் கேமரா 20 டிகிரி அளவுக்கு சாய்ந்தது, அதன் விளைவாக இதனை வழிநடத்தும் தொழில்நுட்பத்தில் கோளாறு ஏற்பட்டதாக இந்த தானியங்கி ஹெலிகாப்டரின் தலைமை விமானி ஹவர்ட் கிரிப்பின் தெரிவித்தார்.
ஹெலிகாப்டரில் இருந்த கேமராவின் கோணம் மாறியதன் காரணமாக இது ஏற்கனவே எடுத்த புகைப்படத்தை கொண்டு மீண்டும் ஆய்வு கூடம் திரும்புவதில் சிக்கல் ஏற்பட்டது.
திரும்பி செல்லும் திக்கு தெரியாமல் செவ்வாய் கிரகத்தில் ஒரு நிமிட நேரம் திண்டாடிய ஹெலிகாப்டர், அதில் உள்ள அவசர கால மாற்று ஏற்பாட்டின் உதவியுடன் சிறிது நேரம் கழித்து தரையிறங்கியதாக வியாழனன்று நாசா தெரிவித்துள்ளது.
இந்த தொழில்நுட்ப கோளாறை சரிசெய்யும் பணியில் நாசா விஞ்ஞானிகள் தொடர்ந்து ஈடுபட்டு வருவதாகவும் அவர்கள் கூறியுள்ளனர்.