டெல்லி: இந்தியாவில் சமூக வலைதளங்களுக்கு புதிய கட்டுப்பாடுகள் அறிவிக்கப்பட்டு உள்ளன. இதற்கு சில நிறுவனங்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்து வந்த நிலையில், கூகுள் நிறுவனம் இந்தியாவுக்கு ஆதரவாக கருத்து தெரிவித்து உள்ளது.
புதிய சமூக வலைதள விதிமுறைகள் குறித்து கூகுள் நிறுவன தலைமை செயல் அதிகாரி சுந்தர்பிச்சை, ஓபன் இணையம் மிக முக்கியம்; அதேவேளையில் உள்ளூர் சட்டங்களும் மதிக்கப்பபட வேண்டும் என பளீச்சென பதில் தெரிவித்து உள்ளார்.
பேஸ்புக், டிவிட்டர், இன்ஸ்டாகிராம், வாட்ஸ்அப் உள்பட சமூக வலைத்தளங்களில் பயனாளர்களின் புகார்கள் குறித்து விரைவாகவும் உரிய முறையிலும் நடவடிக்கைகள் எடுக்கப்படுவதில்லை என்ற விமர்சனங்கள் பரவலாக முன் வைக்கப்படுகிறது. இதைத்தொடர்ந்து, மத்திய அரசு சமூக வலைத்தளங்களுக்கான புதிய விதிமுறைகள் கடந்த பிப்ரவரி 25ஆம் தேதி வெளியிட்டது.
சமூக வலைதள நிறுவனங்கள் மற்றும் ஒடிடி தளங்களில் சா்ச்சைக்குரியதாக அதிகாரிகள் சுட்டிக்காட்டும் பதிவுகளை 36 மணி நேரங்களுக்குள் நீக்குவது உள்பட பல்வேறு கட்டுப்பாட்டு விதிமுறைகளை மத்திய அரசு அமலாக்கி இருக்கிறது.
மேலும், சமூக வலைத்தள நிறுவனங்கள் புகார்களை விசாரிப்பதற்காக இந்தியாவில் அதிகாரி ஒருவரை நியமிக்க வேண்டும். அரசின் புகார்களை இந்த அதிகாரிதான் விசாரிக்க வேண்டும். அரசின் அறிவித்தல்களைக் கண்டிப்பாக இவர் அமல்படுத்த வேண்டும். மேலும், சமூக வலைத்தளங்களில் பதிவேற்றப்படுபவை குறித்து விசாரிக்கத் தனிக் குழு அமைக்க வேண்டும். மத்திய அமைச்சர்களும் இடம்பெற்றுள்ள இந்தக் குழு தான் புகார்களில் நடவடிக்கை எடுக்கும் உச்சபட்ச அதிகாரம் கொண்டதாக இருக்கும்.
இந்த விதிகளுக்கு இணங்கிச் செயல்பட சமூக வலைத்தளங்களுக்கு 3 மாத கால அவகாசம் வழங்கப்பட்டது. வெளிப்படத்தன்மை இந்த கால அவகாசம் நேற்று முன்தினம் முடிந்தது.
மத்திய அரசின் இந்தப் புதிய விதிகளை ஏற்பதாக பேஸ்புக் நிறுவனம் அறிவித்துள்ளது. அதுபோல கூகுள் நிறுவனமும் இந்திய சட்டத்திட்டங்களுக்கு கட்டுப்பாடுவதாக தெரிவித்து உள்ளது. ஆனால், டிவிட்டர், வாட்ஸ்அப் நிறுவனங்கள் கடும எதிர்ப்பு தெரிவித்து வருகின்றன. வாட்ஸ்அப் நிறுவனம் டெல்லி உயர்நீதிமன்றத்திலும் வழக்கு தொடர்ந்துள்ளது.
இ,ந்த நிலையில், இந்திய அரசின் புதிய விதிகள் குறித்து கூகுள் தலைமை செயல் அதிகாரி சுந்தர் பிச்சை கூறியதாவது..,
கூகுள் உள்ளூர் சட்ட விதிகளுக்கு உட்பட்டு, அரசாங்கங்கள் உடன் இணைந்து பொறுப்பான முறையில் செயல்படுவதை வாடிக்கையாக கொண்டுள்ளது. அரசாங்கங்கள் வளர்ந்து வரும் தொழில்நுட்ப யுகத்திற்கு ஏற்ப ஒழுங்குமுறை நடைமுறைகளை அமலாக்குகின்றன, எங்களின் உள்ளூர் அதிகாரிகள் கூகுள் இயங்கி வரும் ஒவ்வொரு நாட்டிலும், அந்நாட்டின் உள்ளூர் விதிகளுக்கு உட்பட்டு அவற்றுக்கு மதிப்பு அளிப்போம்.
அரசு கோரிக்கைகளை ஏற்கும் விவகாரங்கள் குறித்து எங்களிடம் வெளிப்படையான அறிக்கைகள் உள்ளன. அவற்றை நாங்கள் சம்மந்தப்பட்ட அறிக்கைகளில் குறிப்பிடுவோம், ஐரோப்பாவாக இருந்தாலும் சரி இந்தியாவாக இருந்தாலும் சரி, கூகுள் என்றும் உள்ளூர் சட்டங்களை மதித்து, அதற்கு இணங்கியே செயல்படும் என சுந்தர் பிச்சை தெரிவித்து உள்ளார்.