டில்லி
இந்திய தகவல் தொழில் நுட்ப விதிகளைப் பின்பற்றத் தயாராக உள்ளதாகக் கூறிய டிவிட்டர் மத்திய அரசால் மிரட்டப்படுவதாக தெரிவித்துள்ளது.
சமூக வலைத் தளங்களான முகநூல், டிவிட்டர், வாட்ஸ்அப், உள்ளிட்டவற்றுக்கு மத்திய அரசு சமீபத்தில் புதிய விதிமுறைகளை வெளியிட்டது. இது மக்களின் கருத்துச் சுதந்திரம் மற்றும் தனி நபர் உரிமையைப் பறிப்பதாகப் பலரும் குற்றம் சாட்டினர். முகநூல் மற்றும் டிவிட்டர் உள்ளிட்ட அனைத்தும் இந்திய அரசால் தடை செய்யப்படலாம் எனச் செய்திகள் வந்தன.
இது குறித்து டிவிட்டர் நிறுவனம், “இந்திய அரசின் புதிய தகவல் தொழில்நுட்ப விதிகளைப் பின்பற்ற நாங்கள் தயாராக உள்ளோம். ஆயினும் மத்திய அரசு காவல்துறையின் மூலம் எங்களை மிரட்டி பணிய வைக்க முயல்கிறது. நாங்கள் இந்தியாவில் சேவை தொடர அரசின் சட்டத்துக்கு உட்பட்டு செயல்பட்டாலும் சர்வதேச அளவில் டிவிட்டர் பின்பற்றும் வழிகாட்டு நெறிமுறைகளில் மாற்றம் இருக்காது.
எங்களது கொள்கைகளான வெளிப்படைத்தன்மை, கருத்துச் சுதந்திரத்தை பாதுகாத்தல், அனைவரும் குரலுக்கு மதிப்பு அளித்தல் போன்றவற்றில் எவ்வித மாற்றமும் இருக்காது. அப்படி இருக்க காவல்துறை மூலம் எங்களை மிரட்டுவது கவலையை அளிக்கிறது. சமீபத்தில் எங்கள் அலுவலகத்தில் காவல்துறை நடத்திய சோதனை எங்களை மிரட்ட நடத்தப்பட்டது” எனத் தெரிவித்துள்ளது.
டிவிட்டரின் இந்த வெளிப்படையான குற்றச்சாட்டு மத்திய அரசுக்கு அதிர்ச்சி அளித்துள்ளதாகக் கூறப்படுகிறது. டில்லி காவல்துறையினர் டிவிட்டர் நிறுவன குற்றச்சாட்டை மறுத்துள்ளனர். தாங்கள் சட்டப்படியான சோதனை நடவடிக்கைகளை மேற்கொண்டதாகவும் அனுதாபம் பெறும் நோக்கத்துடன் டிவிட்டர் இவ்வாறு அறிக்கை வெளியிட்டுள்ளதாகவும் காவல்துறையினர் கூறி உள்ளனர்.