டில்லி
மத்திய அரசு முடக்கி வைத்துள்ள எம் பிக்கள் தொகுதி மேம்பாட்டு நிதியை மீண்டும் அளிக்க மக்களவை காங்கிரஸ் தலைவர் ஆதிர் ரஞ்சன் சவுத்ரி வலியுறுத்தி உள்ளார்.
மக்களவை உறுப்பினர்கள் அனைவருக்கும் தொகுதி மேம்பாட்டுக்காக ஒதுக்கப்படும் நிதியை மத்திய அரசு முடக்கி வைத்துள்ளது. கடந்த ஆண்டு கொரோனா பரவல் அதிகமானதால் இந்த நிதியை மத்திய அரசு நிறுத்தி வைத்து அதக் கொண்டு கொரோனா தடுப்பு நடவடிக்கைகள் மேற்கொள்ள உள்ளதாக அறிவித்தது.
இதுவரை அந்த நிதி மீண்டும் அளிக்கப்படவில்லை. இது குறித்து மக்களவை காங்கிரஸ் கட்சி தலைவரான ஆதிர் ரஞ்சன் சவுத்ரி, மக்களவை சபாநாயகர் ஓம் பிர்லாவுக்கு ஒரு கடிதம் எழுதி உள்ளார். அந்த கடிதத்தில் அவர், “மக்களவை உறுப்பினர்கள் தங்கள் தொகுதி மக்களுக்கு உதவி செய்யத் தொகுதி மேம்பாட்டு நிதி மட்டுமே பெரிதும் உதவி வந்தது. அந்த நிதி இரண்டு வருடமாக முடக்கி வைக்கப்பட்டுள்ளது.
தற்போது நாடெங்கும் கொரோனா இரண்டாம் அலை பரவி வரும் வேளையில் இந்த தொகுதி மேம்பாட்டு நிதி அளிக்கப்பட்டால் எங்களால் எங்கள் தொகுதி மக்களுக்குப் பல நலத்திட்டங்களை நடத்த முடியும். மேலும் தற்போது யாஸ் புயலால் மேற்கு வங்க மாநிலம், ஒரிசா பொன்ற மாநிலங்கள் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளன. இந்த நிதியை மீண்டும் அளித்தால் நிவாரண உதவிகளை அதிக அளவில் செய்ய முடியும்.
குறிப்பாக மக்களவை உறுப்பினர்கள் இந்த நிதியின் மூலம் கொரோனா பணியாளர்களுக்குத் தேவையான பிபிஇ உடைகள், நோயாளிகளுக்கு ஆக்சிஜன் சிலிண்டர்கள், வெண்டிலேட்டர் போன்றவற்றை வாங்கி அளிக்க முடியும் தற்போதுள்ள நிலையை மனதில் கொண்டு நீங்கள் முடக்கி வைக்கப்பட்ட தொகுதி மேம்பாட்டு நிதியை அளிக்க தேவையான நடவடிக்கைகள் எடுக்க வேண்டும்” எனக் கேட்டுக் கொண்டுள்ளார்.