கொல்கத்தா

ரிபப்ளிக் வங்கம் டிவி செய்தியாளர் அவிஷேக் சென்குப்தா மீது  சிபிஐ அதிகாரி ஆள்மாறாட்டம், ஆள் கடத்தல் எனப் பல குற்றச்சாட்டுகள் பதியப்பட்டுள்ளது.

ரிபப்ளிக் டிவியின் வங்கமொழி சேனலான ரிபப்ளிக் வங்கம் டிவி இந்த வருடத் தொடக்கத்தில் உருவானது.   இந்த டிவியில் முதன்மை செய்தியாளராக ஆரம்பம் முதல் அவிஷேக் சென்குப்தா பணி புரிந்து வருகிறார்.    இதற்கும் முன்பு அவர் ஓன்கார் நியூஸ், பங்களா பாரத், கல்கத்தா நீயூஸ் ஆகிய சேனல்களில் பணிபுரிந்துள்ளார்.   அவர் பணி இன்னும் நிரந்தரம் ஆக்கப்படவில்லை.

கடந்த சில வருடங்களாக சென்குப்தா தன்னை ஒரு சிபிஐ அதிகாரி என அறிவித்துள்ளார்.  அடிக்கடி இவர் கொல்கத்தா சிபிஐ அலுவலகத்துக்குச் சென்று வந்துள்ளார்.

கடந்த  மே மாதம் 24 ஆம் தேதி அன்று ஸ்வீட்டி நாத் ராய் என்னும் பெண் வர்த்தகப்புள்ளி கொல்கத்தா காவல்துறையினரிடம் தம் கணவர் அஜித் குமார் ராய் என்பவரை ஒரு சில போலி சிபிஐ அதிகாரிகள் எங்கோ அழைத்து சென்றுள்ளதாகப் புகார் அளித்தார்.  மேலும் அவருக்கு தன் கணவரை விடுவிக்க அவர்கள் ரூ.2 கோடி பணம் கேட்டதாகவும் புகாரில் தெரிவித்துள்ளார்.

அதன் பிறகு ஸ்வீட்டி தனது கும்ப நண்பர்கள் மூலம் பேரம் பேசி ரூ.1 கோடி கொடுத்து தனது கணவரை மீட்டு வந்துள்ளார்.   இந்த  புகார் அளிக்கப்பட்ட காஸ்பா காவல்நிலையம் இந்த புகாரைப் புலனாய்வுத் துறைக்கு மாற்றியது.    இந்த தொகை கைமாறியது குறித்து காவல்துறைக்கு முன் குட்டியே தெரிந்திருக்கலாம் எனக் கூறப்படுகிறது.

விசாரணையில் சென்குப்தா தம்மை சிபிஐ துணைத் தலைவர் என அறிமுகம் செய்து கொண்டு ராய் தம்பதியினரை மிரட்டியது தெரிய வந்துள்ளது.   அவர் அஜித் ராயை விசாரணைக்காக காஸ்பா காவல்நிலையத்துக்கு அழைத்துச் சென்று அதன் பிறகே வேறு ஒரு இடத்துக்குக்  கூட்டிச் சென்று அடைத்து வைத்ததாகக் கூறப்படுகிறது.

எனவே காவல்துறை சென்குப்தா மீது ஆள் கடத்தல், சிபிஐ அதிகாரியாக ஆள் மாறாட்டம், பணம் கேட்டு மிரட்டல் எனப் பல பிரிவுகளில் வழக்குப் பதிந்தது.   இந்த குற்றங்களில் மேலும் சிலர் சம்பந்தப்பட்டு இருக்கலாம் என்பதால் அவர்களையும் தேடும் பணி நடைபெற்று வருகிறது.   இந்த கடத்தலுக்கு பயன்படுத்தப்பட்ட கார் ஓட்டுநர் ராகேஷ் அதிகாரி, மற்றும், சென்குப்தாவின் கூட்டாளிகள் எனச் சந்தேகத்துக்கு உள்ளான ஸ்வரூப ராய் மற்ற்ய்ம் பிரதிக் சர்க்கார் ஆகியோர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

இந்நிலையில் ரிபப்ளிக் வங்கம் டிவி சென்குப்தா பணி நிரந்தரம் செய்யப்படவில்லை என்பதால் இந்த குற்றச்சாட்டுக்காக பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளதாக அறிவித்துள்ளது.  மேலும் தங்கள் நிறுவனம் இது போலக் குற்ற நடவடிக்கைகளை ஒரு போதும் சகித்துக் கொள்ளாது என்பதால் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகவும் அறிக்கையில் தெரிவித்துள்ளது.