சென்னை: கவிஞர் வைரமுத்துவுக்கு கேரளாவின் ஓ.என்.வி விருது அறிவிக்கப்பட்டு உள்ளதற்கு திமுக தலைவரும், தமிழக முதல்வருமான மு.க.ஸ்டாலின் வாழ்த்து தெரிவித்து உள்ளார்.

இதுகுறித்து டிவிட் பதிவிட்டுள்ள ஸ்டாலின்,  தமிழ்நாட்டின் பெருமைக்குரிய இலக்கியவாதியான கவிப்பேரரசு வைரமுத்துவுக்கு  கேரளாவின் புகழ்பெற்ற ஓ.என்.வி விருது அறிவிக்கப்பட்டுள்ளதற்கு வெளியிட்டுள்ள வாழ்த்து தெரிவிப்பதாக கூறியுள்ளார்.

வைரமுத்துவுக்கு விருது கிடைத்துள்ளது குறித்து ஸ்டாலின் வெளியிட்டுள்ள அறிக்கையில்,
தமிழ்நாட்டின் பெருமைக்குரிய இலக்கியவாதியான கவிப்பேரரசு வைரமுத்துவின் புகழ் மகுடத்தில் மேலும் ஒரு வைரம் மின்னுவது போல கேரளத்தின் புகழ்மிகு ஓ.என்.வி விருது அறிவிக்கப்பட்டிருப்பதற்கு வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்கிறேன்.

இவ்விருது வைரமுத்துவின் தமிழாற்றல் எல்லைகளை விரிவுபடுத்தி உலகளாவிய விருதுகளை நோக்கிய அவரது பயணத்திற்கான பாதையை வகுத்திருப்பதாக என்று அவர் அதில் தெரிவித்துள்ளார்.

விருது பெற்றது குறித்து வைரமுத்து கூறியிருப்பதாவது,

ஓ.என்.வி. இலக்கிய விருதை பெறுவதை பெரும் பெருமையாக கருதுகிறேன். நான் பெரிதும் மதிக்கும் இலக்கிய பூமியான கேரளத்தில் இருந்து இந்த விருது வந்திருப்பது மகிழ்ச்சி அளிக்கிறது.

தமிழுக்கு சகோதர மொழி சூட்டிய மகுடமாக நான் இதைக் கருதுகிறேன். மலையாளத்தின் காற்றும், தண்ணீரும் கூட இலக்கியம் பேசும். அந்த மண்ணில் இருந்து பெறும் விருதை மகுடமாக கருதுகிறேன். வெவ்வேறு மொழிகளில் எழுதப்பட்டாலும் இந்திய இலக்கியம் ஒன்று தான். இந்த உயரிய விருதினை உலகத் தமிழர்களோடும், சக படைப்பாளிகளோடும் பகிர்ந்து கொள்கிறேன் என்றார்.

தனக்கு விருது கிடைத்த கையோடு தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலினை சந்தித்து வாழ்த்து பெற்றுள்ளார் வைரமுத்து.

இது குறித்து அவர் ட்விட்டரில் கூறியதாவது,

கோபாலபுரத்தில்
ஓ.என்.வி இலக்கிய விருதினைக்
கலைஞருக்குக் காணிக்கை செய்தேன்.

முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
என்னை வாழ்த்தி மகிழ்வித்தார்.

அவரது குரலும் அன்பும்
இன்னும் அந்த இல்லத்தில்
கலைஞர் வாழ்வதாகவே
பிரமையூட்டின.

தந்தைபோல்
தமிழ் மதிக்கும் தனயனுக்கு
நன்றி சொல்லி மகிழ்ந்தேன்

இவ்வாறு கூறி உள்ளார்.