டெல்லி: மத்திய அரசின் புதிய சட்டவிதிகளுக்கு எதிராக வாட்ஸ்ஆப் நிறுவனம் டெல்லி உயர்நீதி மன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ளது. மத்தியஅரசின் புதிய விதிகள், அரசியல் சட்டத்துக்கு விரோதமானது என தெரிவித்து  உள்ளது.

சமூக ஊடகங்களான ‘டுவிட்டர், பேஸ்புக், வாட்ஸ்ஆப், இன்ஸ்டாகிராம்’ போன்ற நிறுவனங்கள் தங்களது பயனாளர்களின் புகார்கள் தொடர்பாக நடவடிக்கை எடுக்க தலைமை நடவடிக்கை அதிகாரி, சிறப்பு பணி தொடர்பு நபர், உள்ளுறை குறைதீர் அதிகாரி ஆகியோரை நியமிக்க வேண்டும் என்பது உள்பட பல புதிய விதிகளை மத்திய அரசு கடந்த பிப்ரவரி 25ம் தேதி வெளியிட்டது. இந்த விதிகளுக்கு இணங்கிச் செயல்பட சமூக ஊடகங்களுக்கு மூன்று மாத அவகாசம் அளிக்கப்பட்டது. ‘விதிகளுக்கு இணங்காத நிறுவனங்களுக்கு எதிராக தடை உள்ளிட்ட நடவடிக்கை எடுக்கப்படும்’ எனத் தெரிவிக்கப்பட்டிருந்தது.

இந்த நிலையில் அந்த அவகாசம் நேற்று (மே 25) நிறைவடைந்தது. இதையடுத்து, ‘டுவிட்டர், பேஸ்புக், வாட்ஸ்ஆப், இன்ஸ்டாகிராம்’ உள்ளிட்ட சமூக வலைதளங்கள் இன்று முதல் மூடப்படுமா என்ற கேள்வி எழுந்தது. ஆனால், டுவிட்டர் உள்ளிட்ட சமூக வலைதளங்களில், மத்திய அரசின் புதிய சட்ட விதிகளை ஏற்றுக் கொண்டதாக செய்திகள் வெளிவந்தன.

இந்த நிலையில், மத்திய அரசின் புதிய சட்ட விதிகளுக்கு எதிராக, வாட்ஸ்ஆப் நிர்வாகம் டெல்லி ஐகோர்ட்டில் வழக்கு தாக்கல் செய்து உள்ளதாக கூறப்படுகிறது. ‘புதிய விதிகள் தனியுரிமை தகவல் பாதுகாப்பு முற்றுப்புள்ளி வைக்கும். இது அரசியல் சாசன சட்டத்திற்கு எதிரானது’ என, அந்த மனுவில் குறிப்பிடப்பட்டுள்ளதாக தெரிகிறது.

இந்த வழக்கு நீதிமன்றத்தில் விரைவில் விசாரணைக்கு வர உள்ளது குறிப்பிடத்தக்கது.