சென்னை கே.கே.நகரில் இயங்கி வரும் புகழ்பெற்ற பத்ம சோஷத்ரி பால பவன் (பிஎஸ்பிபி) பள்ளியில் கணக்குபதிவியல் மற்றும் வணிக பாடம் கற்பிக்கும் ஆசிரியர் ராஜகோபாலனுக்கு எதிராக பாலியல் சர்ச்சை எழுந்துள்ள நிலையில், சம்மந்தப்பட்ட ஆசிரியர் மீது உடனடி நடவடிக்கை எடுக்கக் கோரி சமூகவலைதளங்களில் பிரபலங்கள் பலரும் குரல் எழுப்பி வருகின்றனர்.

இதுபற்றி அறிக்கை வெளியிட்டு தெளிவுபடுத்தியுள்ள பள்ளி முதல்வர் கீதா கோவிந்தராஜன் மற்றும் டீன், தாளாளர் ஷீலா ராஜேந்திரன் உள்ளிட்டோர், கேள்விக்குரிய அந்த ஆசிரியரைப் பற்றியோ அல்லது இப்படியான புகாரோ இதுவரையில் தங்களின் பார்வைக்கு வரவில்லை என்றும், தற்போது எழும் புகார்களில் குறிப்பிடப்படுவது மாதிரியான குற்றச் செயல்களை பூச்சிய அளவிலும் பள்ளி நிர்வாகம் ஏற்காது என்றும், அதே சமயம் தங்களது மாணவர்களின் நலனில் அக்கறை கொண்ட தங்கள் நிர்வாகம் இதுகுறித்து தகுந்த விசாரணை மேற்கொண்டு உரிய நடவடிகைக்கள் எடுக்குமென்றும் குறிப்பிட்டுள்ளனர்.

ஆனால் அந்த ஆசிரியர் மீதான புகார்கள் வரிசைகட்டி எழுந்துள்ளன.

இந்நிலையில் நடிகை லட்சுமி பிரியா சந்திரமௌலி தமது ட்விட்டர் பக்கத்தில் இதுகுறித்து பேசும்போது, “ஓ, இப்போது இதுவும்!! பல தசாப்தங்களாக நடந்து வரும் இந்த வகையான நடத்தை பற்றி பள்ளி எப்படி அறியாமல் இருந்திருக்க முடியும்? ராஜகோபாலன் மற்றும் பள்ளி மீது உரிய அதிகாரிகள் தகுந்த நடவடிக்கை எடுப்பார்கள் என்று அனைவரும் கோருங்கள் மற்றும் நம்புவோமாக!!” என தமது ட்விட்டரில் பதிவிட்டுள்ளார்.

அண்மையில் மாரி செல்வராஜ் இயக்கத்தில் தனுஷின் நடிப்பில் வெளியான கர்ணன் படத்தில் தமது சிறப்பான நடிப்புக்காக பாராட்டப்பட்டார்.