சேலம்: புதுச்சேரியில் துணைமுதல்வர் பதவி குறித்து இதுவரை பரிசீலிக்கவில்லை என்று  என்.ஆர்.காங்கிரஸ் தலைவர் ரங்கசாமி தெரிவித்துள்ளார்.

புதுச்சேரியில் என்.ஆர்.காங்கிரஸ், பாஜக கூட்டணி வெற்றி பெற்றுள்ளது. என்.ஆர்.காங்கிரஸ் 10 இடங்களிலும், பாஜக 6 இடங்களிலும் வெற்றி பெற்றுள்ளது.    மாநில முதல்வராக என்.ஆர்.ரங்கசாமி வரும் 7ந்தேதி பதவி ஏற்க உள்ளார். இந்த நிலையில், மாநில  ஆட்சியில் இடம்பெறுவோம் என்றும், முதல்வர் பதவி குறித்து ஆலோசித்து முடிவெடுப்போம் என மாநில பாஜகவினர் கூறி வந்தனர். மேலும் துணைமுதல்வர் பதவி கேட்பதாகவும் தகவல் வெளியானது.

இந்த நிலையில், சேலத்தில் உள்ள குலதெய்வ கோவிலுக்கு வந்தார். சேலம் சூரமங்கலத்தில் உள்ள அப்பா பைத்தியம் சாமி ஆலயத்துக்கு வந்து வழிபட்டார். பின்னர் செய்தி யாளர்களை சந்தித்தார். அப்போது அவரிடம்  செய்தியாளர்கள் பல்வேறு கேள்களை எழுப்பினர்.  பாஜகவினர் துணைமுதல்வர் பதவி உள்பட அமைச்சர் பதவி கேட்கிறார்களே என்ற கேள்விக்கு,

அப்படி ஏதும் தெரியவில்லையே என்று நழுவலாக பதில் தெரிவித்தார். ஆனால், மத்திய அரசு கூறினால் அதுகுறித்த பரிசீலிப்போம் என்றும் கூறினார்.

வருகிற 7 ஆம் தேதி, வெள்ளிக்கிழமை பதவி ஏற்பு விழா நடைபெற உள்ளது என்றவர்,  புதுச்சேரியின் வளர்ச்சிக்கு துணைநிலை ஆளுநர் முழு ஒத்துழைப்பு தருவார் என்று நம்புவதாகவும்,  தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள புதிய அரசுக்கு சிறந்த முறையில் ஆதரவு நிச்சயம் தருவார் என்றார்.

மேலும், கொரோனா பரவலை தடுக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது,. நாங்கள் பொறுப்பேற்றதும் மேலும் நடவடிக்கை தீவிரப்படுத்துவோம்.

இவ்வாறு அவர் கூறினார்.