டெல்லி: கொரோனா அச்சுறுத்தலுக்கு மத்தியில் நடைபெற்றுவந்த ஐபிஎல் போட்டி, தற்போது திடீரென  ஒத்தி வைக்கப்பட்டதற்கான காரணம் குறித்து பல்வேறு தகவல்கள் பரவி வருகின்றன. முக்கியமாக  ஐபிஎல் சூதாட்டமும் காரணமாக கூறப்படுகிறது.

இந்த விவகாரத்தில் பல்வேறு முறைகேடுகள் நடைபெற்றுள்ளது என்றும், டெல்லி காவல்துறையை கையில் வைத்துள்ள  மத்தியஅரசு, அதை மறைக்கவே, ஐபிஎல் போட்டிகளை ஒத்தி வைத்து, திசை திருப்பி இருப்பதாகவும், டெல்லி  காங்கிரஸ் தலைவர் ஆதாரத்துடன் அம்பலப்படுத்தி உள்ளார்.

நடப்பு ஆண்டுக்கான (2021) ஐபிஎல் போட்டிகள் கடந்த ஏப்ரல் 9-ம் தேதி சென்னை சேப்பாக்கம் எம் ஏ சிதம்பரம் மைதானத்தில் தொடங்கியது. கொரோனா தொற்று காரணமாக பார்வையாளர்கள் இன்றி நடைபெற்று வந்த இப்போட்டியை தொலைக்காட்சிகளிலும், இணையதளங்களிலும் கோடிக்கணக்கானோர் கண்டுகழித்து வந்தனர். முதல்போட்டி,  ஏப்ரல் 9-ம் தேதி சென்னையில்,  மும்பை இந்தியன்ஸ் மற்றும் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணிகளுக்கு இடையிலான போட்டியுடன் தொடங்கியது.

29 போட்டிகள் வரை விளையாடப்பட்ட இந்த போட்டியில் 8-ல் 6 போட்டிகளில் வென்று டெல்லி கேப்பிட்டல்ஸ் அணி முதலிடத்தில் இருக்கிறது. சென்னை சூப்பர் கிங்ஸ் 7-ல் 5 போட்டிகளில் வென்று இரண்டாவது இடத்திலும், 7-ல் 5 போட்டிகளில் வென்று பெங்களூரு ராயல் சேலஞ்சர்ஸ் அணி மூன்றாவது இடத்திலும் இருக்கின்றன.

இந்த நிலையில், பல வீரர்கள் கொரோனாவால் அடுத்தடுத்து பாதிக்கப்பட்டு வருவதாலும், நாடு முழுவதும் கொரோனா 2வது அலையின் தாக்கம் தீவிரமாக உள்ளதாலும், ஐபிஎல் போட்டிகளை ஒத்திவைக்க பல தரப்பில் இருந்து அழுத்தம் கொடுக்கப்பட்டு வந்தது. மருத்துவ நிபுணர்கள் உள்பட ஒரு தரப்பினர் ஐபிஎல் போட்டிகளை தடை செய்ய வேண்டும் என குரல் எழுப்பியதுடன், இது தொடர்பாக நீதிமன்றத்தில் வழக்கும் தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

ஆனால், வீட்டில் முடங்கி, மனஅழுத்தத்தக்கு ஆளாகும் மக்களுக்கு ஐபிஎல் போட்டிகளில் சற்று மனஆறுதலை தரும் என்று  சில வீரர்களும், மற்றொரு  தரப்பினரும் ஆதரவு தெரிவித்து வந்தனர்.

இந்த நிலையில், ஐபிஎல் போட்டிகள் தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்பட்டுள்ளதாகவும், மீண்டும் நடைபெறும் தேதி விரைவில் அறிவிக்கப்படும் என பிசிசிஐ தலைவர் திடீரென தெரிவித்துள்ளார்.

ஐபிஎல் போட்டிகளில் கலந்துகொண்டு விளையாடி வரும் பல்வேறு வெளிநாட்டு வீரர்கள தொடர்ந்து கவலை தெரிவிப்பதால் ஐபிஎல் போட்டிகளை தற்காலிகமாக நிறுத்தி வைக்க முடிவு எடுக்கப்பட்டதாக பிசிஐ தகவல்கள் கூறுகின்றன.

ஆனால்ர, கடந்த ஒரு மாதமாக கொரோனா அச்சுறுத்தலுக்கு மத்தியில்தான் ஐபிஎல் போட்டிகள் நடைபெற்று வந்தது. அதை கண்டுகொள்ளாமல் போட்டிகளை நடத்தி வந்த பிசிசிஐ திடீரென போட்டிகளை தற்காலிகமாக நிறுத்துவதாக கூறியது பல்வேறு சந்தேகங்களுக்கு இடமளித்தது.

இந்த நிலையில், ஐபிஎல் போட்டி தற்காலிகமாக தடை செய்யப்பட்டதற்கு,  ஐபிஎல் சூதாட்டமே காரணம் என்பது தெரிய வந்துள்ளது. இது தொடர்பாக 2 பேர் மீது டெல்லி காவல்துறை வழக்கு பதிவு செய்துள்ளது. இந்த விவகாரம் வெளியில் தெரியாத வகையில், முடக்கவே, ஐபிஎல் போட்டிகளை தற்காலிகமாக ரத்து செய்ய மத்தியஅரசு, பிசிசிஐக்கு நெருக்குதல் கொடுத்துள்ளதாக கூறப்படுகிறது.

யூனியன் பிரதேசமான டெல்லியின் பாதுகாப்பு மற்றும் காவல்துறை போன்றவை மத்திய உள்துறை அமைச்சகத்தின் கட்டுப்பாட்டில் இருந்து வருகிறது என்பது அனைவரும் அறிந்தே. இந்த நிலையில்,  மத்திய உள்துறையின் கட்டுப்ப்பாட்டின் கீழ் டெல்லியில் நடைபெற்ற ஐபிஎல் போட்டியின்போது சூதாட்டம் நடைபெற்றதாக கூறப்படுகிறது. இது தொடர்பாக 2 பேர்மீது வழக்கு பதிவு செய்யப்பட்டு உள்ளது. இதை மறைக்கவே, ஐபிஎல் போட்டி ரத்து செய்யப்பட்டு உள்ளதாக டெல்லி காங்கிரஸ் தலைவர் குற்றம் சாட்டி உள்ளார்.

இதுகுறித்து காங்கிரஸ் உறுப்பினர் பவன் கெரே (pawan care) என்பவர், அதற்கான காவல்துறையினர் முதல் தகவல் அறிக்கையை வெளியிட்டு நிரூபித்து உள்ளார். அதன்படி,

மே 2 ம் தேதி அருண்ஜெட்லி ஸ்டேடியத்தில் நடைபெற்ற ராஜஸ்தான் ராயல்ஸ் & சன் ரைசர்ஸ் ஹைதராபாத் இடையிலான  போட்டியின் போது, போலி அங்கீகார அட்டைகளைப் பெற்று  சட்டவிரோதமாக நுழைந்ததற்காக இரண்டு புக்கிகள் (சூதாட்டம் நடத்துபவர்கள்) கைது செய்யப்பட்டு நீதிமன்றக் காவலுக்கு அனுப்பப்பட்டனர். அவர்கள்மீது ஐபிசி மற்றும் தொற்று நோய்கள் சட்டத்தின் தொடர்புடைய பிரிவுகளின் கீழ் பதிவு செய்யப்பட்ட எஃப்.ஐ.ஆர். வெளியாகி உள்ளது.

இவர்கள்மீது சந்தேகப்பட்ட காவல்துறையினர், அவர்களை மடக்கி விசாரித்தபோது, அவர்கள்  ஐபிஎல் சூதாட்டக்காரர்கள் என்பது தெரிய வந்துள்ளது. அவர்களை கைது செய்த காவல்துறையினர் வழக்கு பதிவு செய்துள்ளனர். அவர்கள் இருவரும்   ‘சுகாதார ஊழியர்கள்’ என்ற போர்வையில் வந்து விஐபி கேலரியில் அமர்ந்து, போட்டிகளை கண்டுகளித்ததுடன் தொடர்பாக சூதாட்டத்தில் ஈடுபட்டது தெரிய வந்துள்ளது. இது சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது.

கடுமையான பாதுகாப்புக்கு மத்தியில் ஐபிஎல் போட்டிகள் நடைபெற்று வந்த நிலையில், ஐபிஎல் சூதாட்டக்குழுவினர் 2 பேர் எப்படி ஸ்டேடியத்திற்குள் நுழைய அனுமதிக்கப் பட்டார்கள் என்று கேள்வி எழுப்பப்பட்டு வருகிறது.  காவல்துறையை கையில் வைத்துள்ள மத்தியஅரசின் தோல்வியே இதை காட்டுகிறது என்றும், ஐபிஎல் சூதாட்டத்துக்கும் மத்தியஅரசுக்கும் தொடர்பு உள்ளது என்று காங்கிரஸ் உள்பட எதிர்க்கட்சிகள் குற்றம் சாட்டி வருகின்றன.