சென்னை:
சிபிஎஸ்இ 12ஆம் வகுப்பு தேர்வு ரத்துசெய்யப்பட்டதாக அறிவிக்கப்பட்டுள்ள நிலையில் தமிழ்நாட்டில் 12ஆம் வகுப்பு தேர்வு குறித்து முதல்வர் மு.க.ஸ்டாலின் தலைமையில் நாளை ஆலோசனைக் கூட்டம் நடைபெற உள்ளது.

கரோனா தொற்று பரவலின் மத்தியில் பள்ளிகள் மற்றும் கல்லூரிகள் உள்ளிட்ட கல்வி நிலையங்கள் இயங்குவது தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்பட்டன. வகுப்புகள் நடைபெறாத நிலையில் தேர்வுகள் நடத்துவது குறித்து பல்வேறு கருத்துகள் நிலவி வந்தன.

இந்நிலையில் தமிழ்நாட்டில் பிளஸ் 2 பொதுத்தேர்வுகள் நடைபெறுமா என்கிற குழப்பம் மாணவர்கள் மற்றும் பெற்றோர்களிடம் நிலவி வந்தது.
இதுகுறித்து பதிலளித்த பள்ளிக்கல்வித் துறை அமைச்சர் அன்பில் மகேஷ் சிபிஎஸ்இ 12ஆம் வகுப்பு தேர்வுகள் நடத்துவது குறித்து மத்திய அரசு எடுக்கும் முடிவினை கருத்தில் கொண்டு தமிழகத்தில் பிளஸ் 2 தேர்வுகள் குறித்த அறிவிப்பு வெளியாகும் எனத் தெரிவித்திருந்தார்.

இதுதொடர்பாக பிரதமர் மோடி தலைமையில் நடைபெற்ற ஆலோசனைக் கூட்டத்தில் சிபிஎஸ்இ 12ஆம் வகுப்பு தேர்வுகள் ரத்து செய்யப்படுவதாக அறிவிக்கப்பட்டது. இந்நிலையில் தமிழகத்தில் பிளஸ் 2 தேர்வுகளை நடத்துவது தொடர்பாக முதல்வர் மு.க.ஸ்டாலின் தலைமையில் நாளை ஆலோசனைக்கூட்டம் நடைபெற உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.