சென்னை: ரேசன் பருப்பு டெண்டர் முறைகேடு கடைசி நேரத்தில் அம்பலமானதால், பழைய டெண்டர் ரத்து செய்யப்பட்டு, புதிய டெண்டர் விடுக்கப்பட்டு உள்ளது. இத்ன் காரணமாக ரூ.100 கோடி வரை இழப்பு தவிர்க்கப்பட்டு இருப்பதாக அறப்போர் இயக்கம் தெரிவித்து உள்ளது.
இந்த புதிய டெண்டரில் பருப்பு விலை பாதிக்கு பாதி குறைக்கப்பட்டு உள்ளது. இதனால், கடந்த 5 ஆண்டுகளாக அதிக விலைக்கு வாங்கியது தொடர்பாக, முன்னாள் அதிமுக அமைச்சர்கள் பலர் மீது வழக்குகள் பாய உள்ளது. இது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
முந்தைய அதிமுக அரசு மீது, நெடுஞ்சாலைத் துறை ஊழல், உள்ளாட்சித் துறை ஊழல் என பல ஊழல் புகார்களை தெரிவிக்கப்பட்டன. இதுகுறித்து விசாரணை நடத்த, அப்போதைய எதிர்க்கட்சி தலைவரான மு.க.ஸ்டாலின் கவர்னரை சந்தித்து, புகார் மனு வழங்கி, விசாரணை நடத்துமாறு கோரிக்கை வைத்திருந்தார். ஆனால், கவர்னர் செவிமடுக்க முத்து விட்டார்.
இந்த நிலையில், தேர்தல் முடிவடைந்து, மே 7ந்தேதி முதல்வராக ஸ்டாலின் பதவி ஏற்க இருந்த நிலையில், மே 5ந்தேதி ரேசன் கடைக்கு தேவையான பருப்பு உள்பட பல பொருட்களுக்கான டெண்டர் விடப்பட்டது. புதிய அரசு அடுத்த 2 நாளில் பதவி ஏற்க இருக்கும்போது, அவசரம், அவசரமாக டெண்டர் விடப்பட்டதற்கான காரணம் குறித்து சில அதிகாரிகள் மட்டத்தில் கிசுகிசு பேசப்பட்ட வந்த நிலையில், முந்தைய அதிமுக அரசுக்கு ஆதரவான ஊழல் அதிகாரிகளின் ஆதரவுடன் டெண்டர் வெளியிடப்பட்டது. இதை அறிந்த அறப்போர் இயக்கம், டெண்டரை ரத்து செய்யக்கோரி நீதிமன்றத்தை நாடி தடை உத்தரவு வாங்கியது.
இதன்பிறகே, இந்த விவகாரம், முதல்வர் ஸ்டாலின் உள்பட திமுக அரசுக்கு தெரிய வந்தது. இதனால் அதிர்ச்சி அடைந்த ஸ்டாலின் அரசு, டெண்டரில் பருப்பு உள்பட பொருட்களின் விலை நிர்ணயம் செய்து வெளியிடப்பட்டது.
அதன்படி, டெண்டருக்கு விண்ணப்பித்த, நாமக்கல் மாவட்டத்தைச் சேர்ந்த கிறிஸ்டி நிறுவனம், கடந்த டெண்டரில் குறிப்பிடப்பட்டிருந்த விலையில் இருந்து கிலோ பருப்புக்கு ரூ.60 வரை குறைந்து, டெண்டர் கோரியது. இது திமுக அரசுக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியது.
அதாவது வெளிச்சந்தையில் ரூ.100க்கு விற்கும் துவரம் பருப்பை, 143.5 ரூபாய்க்கு கொடுக்கும் கிறிஸ்டி நிறுவனத்துடன் ஒப்பந்தம் போடப்பட்டிருக்கிறது. தற்போதைய டெண்டரில் இதன் விலை 60 ரூபாய் வரை மேலும் குறைக்கப்பட்டு உள்ளது.
அறப்போர் இயக்கம் தொடர்ந்து குற்றச்சாட்டுக்களை கூறியதைத் தொடர்ந்து, நுகர்பொருள் வாணிப கழகத்தின் மேலாண்மை இயக்குநராக இருந்து வந்த சுதாதேவியை திமுக அரசு கடந்த வாரம் மாற்றியது. மேலும், கிறிஸ்டி நிறுவனத்துக்குக் கிலோ 143.5 ரூபாய்க்கு 20,000 டன் துவரம்பருப்பு என்று ஒதுக்கப்படவிருந்த டெண்டரை ரத்து செய்து புதிய டெண்டரை கோரியிருக்கிறது முதல்வர் ஸ்டாலின் தலைமையிலான திமுக அரசு.
ஒரு கிலோ பருப்புக்கு ரூ.60 குறைக்கப்படுமானால், இதுவரை, கடந்த 5 ஆண்டுகளாக ரேசன் கடைகளுக்கு பருப்பு மற்றும் மளிகை பொருட்கள் கொள்முதல் செய்ததில் எத்தனை ஆயிரம் கோடி ரூபாய் ஊழல் நடைபெற்றிரும் என கணக்கிட்டு பார்த்ததில் மயக்கமே ஏற்படும் நிலை உருவானது.
இதில் எத்தனை கோடி அமைச்சர்களுக்கு சென்றது, அதிகாரிகளுக்கு சென்றது என்பதை கண்டறிய ஸ்டாலின் தலைமையிலான அரசு தீவிரம் காட்டத்தொடங்கி உள்ளது. கடந்த அதிமுக அரசு மீது, திமுக தொடுக்கும் முதல்வழக்காக இந்த பருப்பு டெண்டர் வழக்கே இருக்கும் என கோட்டை வட்டார தகவல்கள் தெரிவிக்கின்றன. இதனால், பெருந்தலைவர் பெயரைக்கொண்ட முன்னாள் அமைச்சர் உள்பட பலர் ஆடிப்போய் உள்ளனர்.
ரேஷன் பொருட்களைக் கொள்முதல் செய்வதில் பல கோடி ரூபாய் ஊழல் நடைபெறுவதை முதன்முதலாக வெளி உலகுக்கு எடுத்துக்காட்டியது அறப்போர் இயக்கம். தமிழ்நாடு சிவில் சப்ளைஸ் கார்ப்பரேஷன் மூலம் ரேஷன் பொருட்களான சர்க்கரை, பாமாயில் மற்றும் பருப்பு கொள்முதலில் கிட்டத்தட்ட ரூ.1480 கோடி ஊழல் நடந்ததாகக் குற்றம்சாட்டியது. அதாவது சர்க்கரை வாங்கியதில் 111 கோடி ரூபாய் இழப்பு, பருப்பு டெண்டரில் ரூ.870 கோடி இழப்பு, பாமாயில் டெண்டரில் ரூ.499 கோடி இழப்பு ஏற்பட்டதாகத் தெரிவித்தது.
அதிமுக ஆட்சியின்போது, கடந்த 5 ஆண்டுகளில் நாமக்கல்லைச் சேர்ந்த நிறுவனமான கிறிஸ்டி சம்பந்தப்பட்ட நிறுவனங்கள் மட்டுமே பங்கு பெறும் வகையிலும், தமிழ்நாடு சிவில் சப்ளைஸ் கார்ப்பரேஷனுக்கு ரேஷன் பொருட்களை விநியோகம் செய்து வந்த நிறுவனங்கள் பங்கெடுக்க முடியாத வண்ணமும், டெண்டரில் பங்கெடுப்பதற்கான தகுதி விதிகள், சர்க்கரையில் 2019 லும் பாமாயிலில் 2017 லும், பருப்பில் 2015லும் மாற்றப்பட்டதாகவும் அறப்போர் இயக்கம் தெரிவித்தது. அது தற்போது உண்மையாகி உள்ளது.
தற்போது, ரேசன் பொருட்கள் கொள்முதல் செய்யும் வகையிலான புதிய டெண்டருக்கு சென்னை உயர்நீதிமன்றம் அனுமதி வழங்கி உள்ளது.
இந்த நிலையில், அறப்போர் இயக்கம் வெளியிட்டுள்ள முகநூல் பதிவில் கூறியிருப்பதாவது,
துவரம் பருப்பு டெண்டரில் 120 கோடி கொள்ளை அடிக்க Christy – சுதா தேவி – காமராஜ் போட்ட மெகா திட்டம் முறியடிக்கப்பட்டது. அறப்போர் புகார் மூலம் தமிழ்நாட்டு மக்களின் வரிப்பணம் காப்பாற்றப்பட்டது.
ஒரே மாதத்தில் விடப்பட்ட இரண்டு துவரம் பருப்பு டெண்டர்களில் Christy நிறுவனங்களில் ஒன்றான Rasi Nutri Foods நிறுவனம் ஒரு கிலோவுக்கு 59.50 ரூபாய் வித்தியாசத்தில் டெண்டர் கொடுத்துள்ளது. ரத்து செய்யப்பட்ட முந்தைய டெண்டரில் மூன்று நிறுவனங்கள் மட்டுமே பங்கேற்றன. மூன்றில் Rasi நிறுவனம் Christy நிறுவனத்திற்கு சொந்தமானது. மற்ற இரண்டு நிறுவனங்களும் (Kendriya மற்றும் Nacof) Christy நிறுவனத்திற்காக டெண்டர் எடுப்பவர்கள். மூவருமே ரத்து செய்யப்பட்ட பழைய டெண்டரில் கிலோவுக்கு 143.50 ரூபாய்க்கு அதிகமாக விலை கொடுத்துள்ளனர். இவர்கள் மட்டுமே பங்கேற்று விலையை அதிகமாக கொடுக்கும் செட்டிங் டெண்டர் இது தான்.
இந்த செட்டிங் டெண்டர்களுக்கு எதிராக அறப்போர் இயக்கம் தொடர்ந்து போராடி புகார் அளித்து வருகிறது. இந்த புகாரின் விளைவாக புதிதாக பதவி ஏற்ற தமிழ்நாடு அரசு பழைய டெண்டரை ரத்து செய்துவிட்டு பல நிறுவனங்களும் பங்குபெற்று போட்டியிடும் வகையில் டெண்டர் விதிகளை மாற்றி புதிய டெண்டர் வெளியிட்டது. அதன் விளைவு 4 Christy நிறுவனங்களோடு சேர்த்து மொத்தம் 9 நிறுவனங்கள் புதிய துவரம் பருப்பு டெண்டரில் பங்கேற்றுள்ளன. சந்தையில் கிலோ 100 ரூபாய்க்கு குறைவாக கொள்முதல் விலையில் கிடைக்கும் துவரம் பருப்பு டெண்டரில் பங்கேற்ற 8 நிறுவனங்கள் கிலோ 100 ரூபாய்க்கு குறைவாகவே டெண்டர் கொடுத்துள்ளன. இதன் மூலம் தமிழ்நாடு அரசு அதிக விலைக்கு துவரம் பருப்பு வாங்கி அதன் மூலம் கோடிக்கணக்கில் மக்கள் பணம் கொள்ளை போவது தடுக்கப்பட்டது.
ஆனால் கிலோ 146.50 ரூபாய்க்கு முதலில் டெண்டர் கொடுத்த Christyன் Rasi Foods நிறுவனம் டெண்டரில் போட்டி உருவான உடனே இந்த முறை கிலோ 87 ரூபாய் அதாவது கிலோவுக்கு 59.50 ரூபாய் குறைவாக டெண்டர் கொடுக்கிறது. இதன் மூலம் Christy நிறுவனங்கள் இதற்கு முன்பாக எடுத்த அனைத்து டெண்டர்களிலும் போட்டியே இல்லாமல் பல ஆயிரம் கோடி ரூபாய் தமிழ்நாட்டு மக்களிடம் கொள்ளை அடித்தது வெளிச்சத்துக்கு வந்துள்ளது.
கடந்த 5 வருடங்களாக ரேஷன் கடைகளுக்கு பொருட்கள் சப்ளை செய்வதில் Christy – சுதா தேவி – காமராஜ் கூட்டணி அடித்த கொள்ளைகள் முழுமையாக விசாரிக்கப்பட வேண்டும். இப்படிப்பட்ட பகிரங்க கொள்ளைகளில் ஈடுபட்ட Christy நிறுவனங்கள் உடனடியாக BlackList செய்யப்பட வேண்டும். இதற்கு துணையாக இருந்த சுதா தேவி மற்றும் காமராஜ் இருவர் மீதும் வழக்கு பதிந்து விசாரணை செய்து கடும் தண்டனை கொடுக்க வேண்டும். இவர்களால் தமிழ்நாட்டுக்கு ஏற்பட்ட நஷ்டத்தை இவர்களிடம் இருந்து அபராதமாக வசூல் செய்ய வேண்டும் என்று அறப்போர் இயக்கம் கேட்டுக்கொள்கிறது.
என தெரிவித்து உள்ளது.
அறப்போர் இயக்க ஒருங்கிணைப்பாளர் ஜெயராம் வெங்கடேசன், இந்த டெண்டர் ரத்து செய்யப்பட்டதன் மூலம் அரசுக்கு 100கோடி ரூபாய் இழப்பு தடுக்கப்பட்டிருக்கிறது. இது வரவேற்கத்தக்கது என்று தெரிவித்துள்ளார்.
நாமக்கல் மாவட்டம் திருச்செங்கோடு ஆண்டிபாளையத்தில் கிறிஸ்டி நிறுவனம் அமைந்துள்ளது. ஏற்கனவே இந்நிறுவனம் மீது சத்துணவுத் திட்ட முட்டை கொள்முதல் முறைகேடு என பல்வேறு ஊழல் புகார்கள் உள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.