புதுடெல்லி:
தொகுதி மேம்பாட்டுக்காக தனக்கு ஒதுக்கப்பட்டுள்ள நிதியை மேற்படி தொகுதியில் கொரோனா தடுப்பு பணிகளுக்காக செலவழிக்குமாறு மாவட்ட கலெக்டருக்கு சோனியா காந்தி அறிவுறுத்தி உள்ளார்.

உத்தரபிரதேசத்தின் ரேபரேலி தொகுதியில் இருந்து நாடாளுமன்றத்துக்கு தேர்ந்தெடுக்கப்பட்டவர் சோனியா. இந்த தொகுதி மேம்பாட்டுக்காக தனக்கு ஒதுக்கப்பட்டுள்ள நிதியை மேற்படி தொகுதியில் கொரோனா தடுப்பு பணிகளுக்காக செலவழிக்குமாறு மாவட்ட கலெக்டருக்கு அவர் அறிவுறுத்தி உள்ளார்.

இது தொடர்பாக கலெக்டருக்கு அவர் எழுதியுள்ள கடிதத்தில், ‘எனது தொகுதி மேம்பாட்டு நிதியில் இன்னும் ரூ.1.17 கோடி நிலுவையில் இருக்கிறது. நாடு முழுவதும் தற்போது கொரோனா பரவிவருவதால் மக்கள் பாதிக்கப்பட்டும், சொல்லொணா துயரங்களை அனுபவித்தும் வருகின்றனர். எனவே மேற்படி நிதியை ரேபரேலி தொகுதி மக்களின் மேம்பாடு மற்றும் பாதுகாப்புக்காக பயன்படுத்தலாம். அத்துடன் கொரோனா தடுப்பு உபகரணங்கள் உள்ளிட்ட தேவையான பொருட்கள் வாங்கவும் பயன்படுத்தலாம்’ என்று கூறியுள்ளார்.

இந்த தொகைக்கு ரேபரேலி கலெக்டரை பொறுப்பதிகாரியாக நியமித்து இருப்பதாக கூறியுள்ள சோனியா, இது தொடர்பாக மறுஒப்புதல் எதுவும் பெறத்தேவையில்லை என்றும் அந்த கடிதத்தில் குறிப்பிட்டு உள்ளார்.