கொல்கத்தா: மேற்குவங்க மாநிலத்தில் இன்று 6வது கட்ட தேர்தல் வாக்குப்பதிவு நடைபெற்று வருகிறது. இன்று காலை 7 மணிக்கு வாக்குப்பதிவு தொடங்கிய நிலையில், காலை 9.30 மணி வரை 17.19% வாக்குகள் பதிவாகி உள்ளன.
மேற்குவங்க மாநிலத்தில் மொத்த 294 தொகுதிகளுக்கு 8 கட்டங்களாக தேர்தல் அறிவிக்கப்பட்டது. ஏற்கனவே 5 கட்ட தேர்தல் வாக்குப்பதிவு முடிவடைந்த நிலையில், இன்று 6வது கட்ட தேர்தல் வாக்குப்பதிவு இன்று நடைபெற்று வருகிறது. மாநிலத்தின் வடக்கு 24 பர்கானாக்கள், நாடியா, கிழக்கு பர்தமான், உத்தர் தினாஜ்பூர் ஆகிய 4 மாவட்டங்களை சேர்ந்த 43 தொகுதிகளில் வாக்குப்பதிவு நடைபெறுகிறது.
இன்று தேர்தல் நடைபெறும் 43 தொகுதிகளிலும் ஆளும் திரிணாமுல் காங்கிரஸ் மற்றும் பாஜக வேட்பாளர்கள் களத்தில் உள்ளனர். பகுஜன் சமாஜ் கட்சி சார்பில் 37, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு 23, காங்கிரஸ் 12 என பிரதான கட்சிகளின் வேட்பாளர்கள் களம் காண்கின்றனர். தேர்தல் களத்தில் மொத்தம் 306 வேட்பாளர்கள் உள்ளனர். இதில் 27 பேர் பெண்களும், 82 சுயேச்சை வேட்பாளர்களும் அடங்குவர். வாக்களிக்க தகுதியான வாக்காளர்கள் 1.03 கோடி ஆகும். இதில் 50.65 லட்சம் பெண் வாக்காளர்களும், 256 மூன்றாம் பாலினத்தவர்களும் அடங்குவர்.
வாக்குப்பதிவுக்காக 14,480 வாக்குச்சாவடிகள் அமைக்கப்பட்டுள்ளன. இன்று காலை 7 மணிக்கு 6ஆம் கட்ட வாக்குப்பதிவு தொடங்கி நடைபெற்று வருகிறது. வாக்குப்பதிவு நடைபெறும் 43 தொகுதிகளிலும் வரலாறு காணாத பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. மக்கள் அமைதியாக வாக்களிப்பதற்காக மாநில காவல்துறையினருடன் இணைந்து, 1,071 கம்பெனி துணை ராணுவமும் களமிறக்கப்பட்டுள்ளனர்.
7வது கட்ட வாக்குப்பதிவு 26ந்தேதியும், 8வது கட்ட வாக்குப்பதிவு 29 ஆம் தேதிகளில் நடைபெறவுள்ளது அதைத்தொடர்ந்து மே 2 ஆம் தேதி வாக்குகள் அனைத்தும் எண்ணப்பட்டு முடிவுகள் அறிவிக்கப்பட உள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.