டில்லி
எல்லை பிரச்சினையில் மத்திய அரசின் பயனற்ற பேச்சு வார்த்தைகளால் சீனப்படைகள் ஆக்கிரமித்து நாட்டுக்கு ஆபத்து உண்டாவதாகக் காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி கூறி உள்ளார்.

சீனப்படைகள் எல்லையில் ஆக்கிரமிப்பது தொடர்ந்து நடந்து வருகிறது. ஒவ்வொரு முறையும் இந்திய அரசு சீன அரசுடன் பேச்சு வார்த்தை நடத்துவதால் சுமுக உடன்படிக்கை ஏற்படுகிறது. ஆயினும் சில நாட்களில் சீனப்படைகள் மீண்டும் ஆக்கிரமிப்பு நடத்துகின்றன. அதன்பிறகு மற்றொரு பேச்சு வார்த்தை நடைபெறுகிறது.
இதுவரை இது போலப் பல முறை பேச்சு வார்த்தைகள் நடந்த போதிலும் ஒரு சுமுகமான இறுதி முடிவு எட்டப்படாமல் உள்ளது. லடாக் பகுதியில் திடீரென சீனப்படைகள் தாக்குதல் நடத்தியதில் இந்திய ராணுவத்துக்கு பலத்த இழப்பு ஏற்பட்டது. ஆனால் அதன் பிறகும் பேச்சு வார்த்தைகள் தொடர்ந்து நடைபெற்று வருகின்றன.
இந்நிலையில் காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி தனது டிவிட்டரில், “எல்லைப் பிரச்சினையில் சீனாவுடன் மத்திய அரசு நடத்தும் பயனற்ற பேச்சு வார்த்தைகளால் நாட்டுக்கு கடும் ஆபத்து ஏற்பட்டுள்ளது. சீனா நமது எல்லையில் ஹாட் ஸ்பிரிங்ஸ், கோக்ரா, தெப்சாங் பகுதிகளை ஆக்கிரமித்துள்ளது,
இது லடாக் எல்லை விமானப்படைத் தளம் உள்பட இந்தியாவின் முக்கிய தளங்களுக்கு நேரடியான அச்சுறுத்தலாகும். எனவே நம் நாட்டுக்கு இதைவிடச் சிறப்பான நடவடிக்கைகள் தேவை ஆகும்” எனப் பதிவிட்டு மத்திய அரசுக்குத் தனது கண்டனத்தைத் தெரிவித்துள்ளார்.
[youtube-feed feed=1]