சென்னை: ரயில் நிலையத்தில் மக்கள் கூடுவதை தவிர்க்கும் வகையில், முதியவர்கள், மாற்றுத்திறனாளிகளுடன் வருபவர்களுக்கு மட்டுமே பிளாட்பாரம் டிக்கெட் வழங்கப்படும் என ரயில்வே புதிய கட்டுப்பாடுகளை அறிவித்து உள்ளது. அதன்படி, சென்னை ரயில்வே கோட்டத்தில் உள்ள 5 ரயில் நிலையங்களில் பிளாட்பார்ம் டிக்கெட் வழங்குவதில் மாற்றம் செய்யப்பட்டுள்ளது.
தமிழகத்தில் கொரோனா 2ம் அலையின் தீவிரமடைந்துள்ளதைத் தொடர்ந்து, அதை கட்டுப்படுத்தும் வகையில் மாநில அரசு பல்வேறு நடவடிக்கைகள் எடுத்து வருகின்றன. அதன் ஒருபகுதியாக ரயில் நிலையங்களில் பிளாட்பார்ம் டிக்கெட் வழங்குவதில் மாற்றம் செய்யப்பட்டுள்ளது.
ஏற்கனவே கடந்தாண்டு கொரோனா லாக்டவுன் காரணமாக நிறுத்தப்பட்ட நடைமேடை பயணச்சீட்டு மீண்டும் தொடங்கப்பட்டதுடன் கட்டணம் ரூ.50 ஆக வசூலிக்கப்பட்டது.
இந்த நிலையில் தற்போது பிளாட்பாரம் டிக்கெட் வழங்குவதில் மீண்டும் கட்டுப்பாடுகள் கொண்டு வரப்பட்டுள்ளன. அதனப்டி, சென்னை சென்ட்ரல், எழும்பூா், தாம்பரம், காட்பாடி, அரக்கோணம், செங்கல்பட்டு ஆகிய நிலையங்களில் வயதானவா்கள், மாற்றுத்திறனாளிகளுடன் வருபவா்களுக்கு மட்டுமே நடைமேடை பயணச்சீட்டு வழங்கப்படும் என்றும், மற்றவர்களுக்கு அனுமதி இல்லை என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த புதிய கட்டுப்பாடுகள் இன்றுமுதல் அமலுக்கு வருவதாக தெற்கு ரயில்வே தெரிவித்துள்ளது.