சென்னை: தமிழகத்தின் திருநெல்வேலி, கோவை உள்பட 13 மாவட்டங்களில் இன்னும் சில மணி நேரங்களில் இடி, மின்னல், காற்றுடன் கனமழை பெய்யும் என்று  சன்னை  வானிலை ஆய்வுமையம் தெரிவித்து உள்ளது.

அதன்படி,   திருநெல்வேலி, தென்காசி, விருதுநகர், தேனி, திண்டுக்கல், சிவகங்கை, மதுரை, கோயம்புத்தூர், திருப்பூர், தர்மபுரி, தஞ்சாவூர், பெரம்பலூர், கள்ளக்குறிச்சி மாவட்டங்களில் அடுத்த மூன்று மணி நேரத்தில் இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடும் என கூறியுள்ளது.

இதுகுறித்து சென்னை வானிலை மைய இயக்குனர் புவியரசன் கூறியதாவது,

“தமிழகத்தில் வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக நீலகிரி, கோவை, தேனி, திண்டுக்கல், சேலம், தர்மபுரி, திருப்பூர் மற்றும் ஈரோடு ஆகிய 8 மாவட்டங்களில் இடி, மின்னல் பலத்த காற்றுடன் கூடிய கனமழைக்கு வாய்ப்பு உள்ளது. பிற மாவட்டங்கள் மற்றும் புதுவையிலும் மிதமான மழை பெய்ய வாய்ப்பு உள்ளது. சென்னையில் இன்று மழைக்கு வாய்ப்பு உள்ளது.

திருநெல்வேலி, தென்காசி, விருதுநகர், தேனி, திண்டுக்கல், சிவகங்கை, மதுரை, கோயம்புத்தூர், திருப்பூர், தர்மபுரி, தஞ்சாவூர், பெரம்பலூர், கள்ளக்குறிச்சி மாவட்டங்களில் அடுத்த மூன்று மணி நேரத்தில் இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடும்

நாளை நீலகிரி, கோவை, சேலம் ஆகிய மாவட்டங்களில் கனமழை பெய்ய வாய்ப்பு இருக்கிறது. மேலும் தென்மேற்கு வங்கக்கடல் பகுதிகளில் மணிக்கு 40 முதல் 50 கிலோ மீட்டர் வேகத்தில் காற்று வீசக்கூடும் என்பதால் மீனவர்கள் கடலுக்கு செல்வதை தவிர்க்க வேண்டும்.” என்று கூறியுள்ளார்.

மேலும், “ஏப்ரல் 17 ஆம் தேதி தமிழக உள் மாவட்டங்கள் மற்றும் மேற்கு தொடர்ச்சி மலையை ஒட்டிய மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.

ஏனைய மாவட்டங்களில் பெரும்பாலும் வறண்ட வானிலையே நிலவும். ஏப்ரல் 17 மற்றும் 18 ஆகிய தேதிகளில் மேற்கு தொடர்ச்சி மலையை ஒட்டிய மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். ஏனைய மாவட்டங்களில் பெரும்பாலும் வறண்ட வானிலையே நிலவும்.

சென்னையை பொறுத்தவரை அடுத்த 24 மணி நேரத்திற்கு வானம் பொதுவாக மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் ஒருசில பகுதிகளில் இடி மின்னலுடன் கூடிய இலேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். அதிகபட்ச வெப்பநிலை 32 மற்றும் குறைந்தபட்ச வெப்பநிலை 26 டிகிரி செல்சியஸை ஒட்டி இருக்கும்.

இவ்வாறு அவர் கூறினார்.