ஹரித்வார்: நாடு முழுவதும் கொரோனா 2வது அலை தீவிரமாக பரவி வரும் நிலையில் உத்தரகாண்ட் மாநிலம் ஹரித்வாரில் நடைபெற்று வரும் கும்பமேளாவில் கலந்துகொள்பவர்களில் ஏராளமா னோருக்கு தொற்று பாதிப்பு ஏற்பட்டு வருகிறது. கடந்த 4 நாளில் 1701 பேருக்கு கொரோனா பாசிடிவ் கண்டறியப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டு உள்ளது.
இந்தியாவில் கொரோனாவின் தாக்கம் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. தினசரி கடந்த 24 மணி நேரத்தில் 2 லட்சத்துக்கும் மேற்பட்டோருக்கு தொற்று பாதிப்பு உறுதி செய்யப்பட்டு உள்ளது. மகாராஷ்டிரா, கர்நாடகா, ராஜஸ்தான், குஜராத், டெல்லி, தமிழகம் உள்பட பல மாநிலங்களில் தொற்று பரவலை தடுக்க பல்வேறு கட்டுப்பாடுகள் தீவிரப்படுத்தப்பட்டு உள்ளன. பல மாநிலங்களில் இரவு நேர ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
இந்த இக்கட்டான சூழலில், உத்தரகண்ட் மாநிலம் ஹரித்வாரில் கும்பமேளா வெகு விமர்சியாக கொண்டாப்பட்டு வருகிறது. 12 நாட்கள் நடைபெறும் இந்த திருவிழாவில் கலந்து கொண்டு கங்கையில் நீராக உலகம் முழுவதும் உள்ள சாதுக்கள் மட்டுமின்றி, நாடு முழுவதும் இருந்து லட்சக்கணக்கானோர் குவிந்து வருகின்றனர். தினசரி 10 லட்சம் பேர் ஹரித்வாருக்கு வருவதாக அங்கிருந்து வரும் தகவல்கள் தெரிவிக்கின்றன. இவர்களில், 90 சதவிகிதம் பேர் கொரோனா கட்டுப்பாடுகளை மதிப்பது இல்லை. மேலும் யாரும் முகக்கவசமும் அணிய மறுத்து வருகின்றனர். தினசரி லட்சக்கணக்கான பக்தர்கள், கங்கை நதியில் குளித்து வருகின்றனர்.
கும்பமேளாவுக்கு சென்று வந்த உ.பி. மாநில முன்னாள் முதல்வர் அகிலேஷ் யாதவ் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார். மேலும் ஏராளமானோர் பாதிக்கப்பட்டு உள்ளனர்.
இந்த நிலையில், கடந்த 10ந்தேதி முதல் 14ந்தேதி (நேற்று) வரையிலான 4 நாட்களில் மட்டும் 1701 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டு உள்ளதாக மாநில அரசு தெரிவித்து உள்ளது. இது பரபரப்பையும், அதிர்ச்சியையும் ஏற்படுத்தி உள்ளது.