பெங்களூர்:
ஹா கும்பமேளாவில் கலந்து கொண்டு திரும்புபவர்களுக்கு ஆர்.டி.பி.சி.ஆர் சோதனை கட்டாயம் என்று கர்நாடக அரசு அறிவித்துள்ளது.

உத்தரகண்ட் மாநிலம் ஹரித்வாரில், 12 ஆண்டுகளுக்கு ஒரு முறை, மஹா கும்பமேளா திருவிழா நடைபெறும். அதன்படி 2010-க்கு பிறகு இந்தாண்டு ஏப்ரல் முதல் தேதியிலிருந்து கும்பமேளா விழா தொடங்கி பிரம்மாண்டமாக நடக்கிறது. அதே சமயம் கொரோனா இரண்டாம் அலை பரவல் நாடு முழுவதும் பாதிப்பை அதிகப்படுத்தியுள்ளது.

கும்பமேளாவில் பங்கேற்க கொரோனா இல்லை என்கிற சான்று வேண்டும். தனிநபர் இடைவெளி, முக்கவசம் போன்ற வழிமுறைகளை பின்பற்ற வேண்டும்.
ஆனால் லட்சக்கணக்கில் பக்தர்கள் திரள்வதால் கூட்டத்தினரை சமாளிக்க முடியாத நிலை உள்ளது. இன்று கும்பமேளாவின் முக்கிய நாள் என்பதால் காலை முதல் பக்தர்கள், சாதுக்கள் உட்பட மிகப்பெரிய கூட்டத்தினர் கங்கையில் புனித நீராடி வருகின்றனர்.

கொரோனா பாதிப்புகள் அதிகரித்து வரும் அதே வேளையில் லட்சக்கணக்கில் கூட்டம் திரள அனுமதிப்பது விமர்சனத்தை உண்டாக்கியது. இது தொடர்பாக உத்தரகண்ட் அரசும், மதத் தலைவர்களுக்கும் ஆலோசனை நடத்தினர்.

அதில் 2 வாரங்களுக்கு முன்னதாக விழாவை முடித்துக்கொள்வது என முடிவு செய்யப்பட்டதாக தகவல் வெளியாகியுள்ளது. ஜனவரியிலேயே தொடங்கும் கும்பமேளா ஏற்கனவே ஒரு மாதமாக சுருக்கப்பட்டது. தற்போது நிலைமை சரியில்லாததால் மேலும் குறைத்துள்ளனர்.