சென்னை

ர்ணன் திரைப்படம் நிகழும் ஆண்டு குறித்த சர்ச்சை மேலும் தொடர்கையில் இது குறித்து உதயநிதி ஸ்டாலின் மீண்டும் டிவிட்டரில் பதிவு வெளியிட்டுள்ளார்.

கடந்த ஏப்ரல் 9 ஆம் தேதி அன்று தனுஷ் நடித்த கர்ணன் திரைப்படம் வெளியானது.  இந்த திரைப்படத்தை மாரி செல்வராஜ் இயக்கி உள்ளார்.   திரைப்பட ரசிகர்களிடையே இந்த படம் நல்ல வரவேற்பைப் பெற்றுள்ளது.   இந்த திரைப்படம் கடந்த 1995 ஆம் ஆண்டு தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள கொடியன்குளம் கிராமத்தில் காவல்துறையினர் நடத்திய தாக்குதலை மையமாகக் கொண்டு எடுக்கப்பட்டுள்ளது.

ஆயினும் இந்த படம் தொடங்கும் போது இது உண்மை சம்பவம் இல்லை எனவும் இந்த கதை நடப்பது 1977 ஆம் ஆண்டின் முன்பகுதி எனவும் அறிவிக்கப்படுகிறது.   இதையொட்டி 1995 ஆம் ஆண்டு ஜெயலலிதா ஆட்சியின் போது நடந்த கலவரத்தைக் கருணாநிதியின் ஆட்சியின் போது 1997 ஆம் ஆண்டு நடப்பதாக தெரிவித்துள்ளதற்காக கடும் விமர்சனங்களும் இயக்குநருக்குக் கண்டனமும் எழுந்தன.

இதையொட்டி திமுக இளைஞரணி செயலர் உதயநிதி ஸ்டாலின் தனது டிவிட்டரில், “கர்ணன் திரைப்படத்தைப் பார்த்தேன்  ஒடுக்கப்பட்ட மக்களின் வலியையும், மறுக்கப்பட்ட அவர்களின் உரிமையையும் மிகைப்படுத்துதல் இன்றி எடுக்கப்பட்டுள்ள இப்படம் கொண்டாடப்பட வேண்டியது. நண்பர் தனுஷ், அண்ணன் கலைப்புலி தாணு, இயக்குநர் மாரி செல்வராஜ் மூவரிடமும் பேசி அன்பையும் வாழ்த்தையும் தெரிவித்தேன்.

1995 அதிமுக ஆட்சியில் நடந்த கொடியன்குளம் கலவரத்தை மையமாக வைத்து எடுக்கப்பட்டுள்ள இப்படத்தில் அச்சம்பவம் 1997ல் கழக ஆட்சியில் நடந்ததாகக் காட்டப்பட்டுள்ளது. இதனைத் தயாரிப்பாளர், இயக்குநரிடம் சுட்டிக்காட்டினேன். அந்தத் தவற்றை இரு தினங்களில் சரிசெய்துவிடுகிறோம்’ என உறுதியளித்தனர். நன்றி’ என பதிந்திருந்தார்.

நேற்று முதல் கர்ணன் திரைப்படத்தில் தலைப்பு கார்ட் திருத்தப்பட்டு கதையின் நிகழ்வு 1990 ஆண்டுகளின் பிற்பகுதியில் என மாற்றப்பட்டுள்ளது.  இதுவும் கருணாநிதியின் ஆட்சிக் காலத்தையே குறிப்பதால் இயக்குநர் மாரி செல்வராஜ் வேண்டுமென்றே கருணாநிதி மீது அவதூறு பரப்புவதாகக் கண்டனங்கள் எழுந்தன.

மீண்டும் உதயநிதி ஸ்டாலின் தனது டிவிட்டரில், “கர்ணன் திரைப்படம் தவிர்க்க முடியாதது என்பதில் மாற்றுக் கருத்து இல்லை.   1995-ல் நடந்த கொடியன்குளம் கலவரம் 1997-ல் நடந்ததாகக் காட்டப்பட்டிருந்ததைத் தயாரிப்பாளர் – இயக்குநரிடம் சுட்டிக்காட்டினேன். அவர்களும் அதனைத் திருத்திக்கொள்வதாக உறுதியளித்து அதை இன்று செய்துள்ளனர்.

படைப்பிலுள்ள பிழையைச் சுட்டிக்காட்டுகையில் அதைத் திருத்திக்கொள்வது வரவேற்புக்குரியது. கொடியன்குளம் கலவரம் 1995-ல் அதிமுக ஆட்சியில் நடந்ததை அனைவரும் அறிவர். அதற்கு ஏராளமான சான்றுகளும் உள்ளன. எனினும்’90-களின் இறுதியில்’ எனத் திருத்தப்பட்டு வருவதை முன்வைத்தும் அதிருப்தி குரல்கள் எழுகின்றன.

ஒடுக்கப்பட்ட மக்களின் மேன்மைக்கான கருணாநிதியின் பங்களிப்புகள் காலத்தால் அழியாதவை. அதை யாராலும் மறுக்கவோ-மறைக்கவோ முடியாது. எனவே, இந்த விஷயத்தை இத்துடன் விடுத்து ஆக்கப்பூர்வமான பணிகளில் கவனம் செலுத்துவோம். கர்ணன் படக்குழுவுக்கு மீண்டும் என் அன்பையும் வாழ்த்தையும் தெரிவித்துக்கொள்கிறேன்’ என்று பதிவு இட்டுள்ளார்.